எல்லா விஷயத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தும் மலையானவரால் குமுறும் தொண்டர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘வரும் தேர்தலில் போட்டியிட நமக்கு சீட்டு கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில் ரொம்பவே டல் அடித்து காணப்படுகிறாராமே இலை கட்சி மாஜி அமைச்சர்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியின் மாஜி அமைச்சர் ரொம்பவே குழப்பத்தில் இருந்து வருகிறாராம்... குழப்பத்தை தீர்க்க முடியாமல், அவர் தவிச்சிக்கிட்டு இருக்கிறாராம்... இலை கட்சியின் மாஜி அமைச்சரின் வாடிய முகத்தை கண்டு, அவருடைய ஆதரவாளர்களும் குழப்பத்தில் உள்ளார்களாம்.. கடலோர மாவட்ட இலை கட்சியில் தற்போது இந்த டாப்பிக் தான் இலை கட்சியினர் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்.. வரும் தேர்தலில் போட்டியிட நமக்கு சீட் கிடைக்குமா என்ற சந்தேகம், அவருக்கு இப்போதே வந்து விட்டதாம்... தேர்தலில் சீட் முக்கியம் என்பதால், அதை கைப்பற்ற தீவிரமாக வேலை செய்து வருகிறாராம் இலை கட்சியின் மாஜி அமைச்சர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதிய தலைவரு நியமிச்ச பிறகும் எல்லா விஷயத்திலும் முந்திக்கொண்டு மலையானவர் குழப்பத்தை உண்டாக்குவதிலேயே குறியாக இருக்கிறதா அல்வா ஊர் மலராத கட்சி தொண்டர்கள் குமுறுகிறார்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மலராத தேசிய கட்சியின் மாநில தலைவராக அல்வா ஊரின் எம்எல்ஏ பொறுப்பேற்ற பிறகும் மலையான தலைவரின் அணுகுமுறை மாறவில்லையாம்.. மறைமுகமாக ஏதாவது ஒரு குழப்பத்தை செய்து குட்டையில் மீன் பிடிக்கிறாராம்.. இதன் எதிரொலியாக தான் கூட்டணியில் இருந்து விலகிய குக்கர்காரர், அதற்காக ஒரு காரணத்தை சொல்லி அல்வா ஊரின் எம்எல்ஏவை சீண்டினாராம்.. அதன் பின்னணியில் மலையான தலைவரின் சதி தானாம்.. அதுமட்டுமல்லாது, எந்த ஒரு சம்பவத்திலும் மாநில தலைவரை முந்திக் கொண்டு அதிகாரப்பூர்வ கருத்தை வெளியிட்டு விடுகிறாராம் மலையானவர்.. இதனால் மலராத தேசிய கட்சிக்கு யார் மாநில தலைவர் என்ற குழப்பமும் உண்டாகிறதாம்.. குறிப்பாக கரூரில் பலியானவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றவர் மலராத கட்சி சார்பில் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்தாராம்.. மாநில தலைவர் ஒருவர் இருக்கும்போது இந்த கருத்தை தெரிவிக்க மலையான தலைவருக்கு என்ன அதிகாரம் இருக்கு என அல்வா மாவட்ட மலராத தேசிய கட்சியின் தொண்டர்கள் கொதித்துப் போய் உள்ளனராம்.. முன்பு குக்கர்காரரை தூண்டி விட்டார். அதோடு நிற்காமல் சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல மலையானவர் பெயரில் அல்வா ஊரில் நற்பணி மன்றம் தொடங்கியதாக போஸ்டர்கள் மினுமினுத்தன.. தற்போது மாநில தலைவரையும் தாண்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு குழப்பத்தை விளைவிக்கிறாரே, இதற்கு ஒரு எல்லையே கிடையாதா என அல்வா மாவட்ட மலராத தேசிய கட்சியின் தொண்டர்கள் புலம்புறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பதிவு ரத்து நடவடிக்கையால் யூனியன் பிரதேச மருத்துவமனைகள் உஷாராகி இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இன்றைய நவீன உலகில் புதுமையான நோய்கள் மக்களை வதைப்பது வாடிக்கையாகிறது.. கட்டுக் கோப்பான அழகான உடல் வாக்கிற்காக சிலர் எல்லை மீறிய சிகிச்சைகளில் இறங்கி சிக்கும் சம்பவம் ஆங்காங்கே நடக்கிறதாம்.. தமிழகத்தை ஒட்டிய யூனியனில் இருந்து 150 கிலோ எடையுள்ள ஒரு வாலிபர் தனது உடல் பருமனை குறைக்க பல்லாவரம் மருத்துவமனைக்கு சென்றாராம்.. தவறான சிகிச்சை காரணமாக உயிரை எமன் பறிக்க பிரச்னை பூதாகரமானதாம்.. வாலிபரை பறிகொடுத்த தரப்பு அங்குள்ள காக்கிகளிடம் முறையிட்டு முதல்வரிடமும் புகார் மனு அளித்ததாம்.. உடனே மருத்துவமனையின் உரிமம் ரத்தான நிலையில், சிகிச்சை அளித்த மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததாம்..
இதற்காக பிரத்யேக மருத்துவ கவுன்சில் குழு விவரங்களை திரட்ட அறுவை சிகிச்சை அளித்த நிபுணர், மயக்கவியல் மருந்து நிபுணர் ஆகியோரின் தவறே மரணத்துக்கு காரணம் என்பது தெரியவந்ததாம்.. இதன் எதிரொலியாக இரண்டு மருத்துவர்களின் மருத்துவப் பதிவு 3 மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.. இதன் தாக்கம் தமிழகம் மட்டுமல்ல, யூனியனிலும் எதிரொலிக்க தனியார் மருத்துவமனைகள் உஷாராகி இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரசீது போட்டால் அரசுக்கு... போடா விட்டால் எனக்கு என எல்லை தாண்டி வசூலில் அசத்துகிறாராமே ஒரு காக்கி அதிகாரி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து பிரிவில், பல்ேவறு சர்ச்சைகளில் சிக்கும் உதவி ஆய்வாளர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனராம்.. சமீபத்தில் கூட 5க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்காங்க.. ஆனால், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பணிபுரியும் ஆறு எழுத்து பெயர் கொண்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்படவில்லையாம்.. இவர், பல வருடங்களாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறாராம்.. இவர், எல்லை தாண்டி, வேறு காவல்நிலைய பகுதிக்குள் சென்று வாகன சோதனை நடத்தி, காசு குவித்து வருகிறாராம்.. டூ வீலர், வாடகை கார், சரக்கு ஆட்டோ என எந்த வாகனத்தையும் விட்டு வைப்பதில்லையாம்.. ஏதாவது ஒரு குறையை கண்டுபிடித்து, வசூல் குவித்து விடுகிறாராம்.. ‘ரசீது போட்டால் அரசுக்கு... போடாவிட்டால் எனக்கு...’ என மிரட்டியே கரன்சி குவிக்கிறாராம்.. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும், இடமாற்றம் செய்யப்படாமல் இருப்பது பெரும் ஆச்சரியம் அளிக்கிறது என்கிறார்கள், மாநகர காவல் துறையினர். இவர், போக்குவரத்து பிரிவில் மேலதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு வலம் வருவதால், இவரது காட்டில் தொடர் மழையாம்..’’ என்றார் விக்கியானந்தா.