Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைக்க வேண்டும்: டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: உலக அளவில் ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோய் அதிகரித்து வருகிறது. இந்த வகை நோயால் ஆண்டுக்கு 65,000க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து இறக்கின்றனர். ரேபிஸ் நோய் உயிரிழப்பு தற்போது இந்தியாவிலும் கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் சமீபகாலமாக தெரு நாய் கடி என்பது அதிகப்படியாக இருந்து வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தனியார் செய்தித்தாளில் வந்த செய்தியை அடிப்படையாக கொண்டு உச்ச நீதிமன்றம் கடந்த 28ம் தேதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருந்தது. இதையடுத்து மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான துஷார் மேத்தா, ‘‘தெரு நாய் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக கையிலெடுத்தது பெற்றோர்கள் தரப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘சிறு குழந்தைகள் உட்பட யாரும் தெரு நாய் கடியால் பாதிக்கக் கூடாது. அதுப்போன்ற அச்சம் இல்லாத சூழலில் மக்கள் நடமாடும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் ஒரு இடத்தில் இருந்து பிடிக்கப்படும் தெரு நாய் கருத்தடை செய்யப்பட்ட பிறகு மீண்டும் அதே இடத்தில் விடுவிக்கப்படுவதன் ஏன்?. இதுகுறித்து அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும். அதுப்போன்ற நடவடிக்கைகள் என்பது அபத்தமானதாகும். தெரு நாய் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்படுவதனால் ரேபிஸ் தாக்கம் குறையாது. அப்படி இருக்கையில் ஏன் மீண்டும் தெரு நாய்களை பிடித்த இடத்திலே விடுகிறீர்கள்.

இனிமேல் டெல்லியின் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு தெருநாய்களை கூட பார்க்க முடியாத சூழலை உண்டாக்க வேண்டும். மேலும் தெருநாய்கள் அனைத்தும் பிடிக்கப்பட்டு காப்பகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும், இந்த உத்தரவை மதிக்க தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக டெல்லி முழுவதும் நாய் காப்பகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இதுகுறித்து எட்டு வாரங்களுக்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் நாய் காப்பகங்களுக்கு உரிய பணியாளர்களை நியமனம் செய்வதோடு, அங்கிருந்து நாய்கள் தப்பாமல் இருக்கிறது என்பதை உறுதி செய்ய சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். அதேப்போன்று நாய்க்கடி மற்றும் வெறிநாய் தொல்லை குறித்து புகார் அளிக்கக் கூடிய வகையில் தொலைபேசி உதவி எண் ஒன்றை ஒரு வாரத்தில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மேலும் உதவி என் மூலம் பெறக்கூடிய புகார்கள் மீது நான்கு மணி நேரத்தில் டெல்லி அரசால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

* தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை

நீதிபதிகள் கூறுகையில், நாய்களைப் பிடிப்பதை எந்த நபரோ அல்லது விலங்குகள் நல அமைப்போ தடுத்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தெருநாய் கடிப்பதால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை உங்களால் (விலங்கு நல ஆர்வலர்கள்) மீண்டும் அழைத்து வர முடியுமா?. இனி வரும் நாட்களில் எந்த குழந்தையும், சிறுவர்கள் தெரு நாய் கடியால் பலியாகக் கூடாது என்றனர்.