மது பாட்டில்களில் விழிப்புணர்வு உள்ளதால் மது அருந்தும் அளவை மதுபாட்டிலில் குறிப்பிட கோரிய மனு தள்ளுபடி
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஸ்ரீதரன் தாக்கல் செய்த மனுவில், பூரண மதுவிலக்கை கொண்டு வர சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் மது பாட்டில்களில் எவ்வளவு அளவுக்கு குடிக்கலாம் என்று குறிப்பிட வேண்டும். மதுவால் ஏற்படும் குடும்ப வன்முறை சம்பவங்கள், இளம் விதவைகள் அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் நேரில் ஆஜராகி, எந்த அளவுக்கு மது குடிக்க வேண்டும். அதைத் தாண்டி மது குடித்தால் என்ன ஆகும் என்பது குறித்த விழிப்புணர்வை மது பாட்டில்களில் குறிப்பிட வேண்டும் என்றார்.
அப்போது, தமிழக அரசுத்தரப்பில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், இதுதொடர்பாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவுக்கு பதிலளிக்கப்பட்டு விட்டது. மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு என்று மது பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுவினால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மது பாட்டிலில், மது உடல் நலனுக்கு தீங்கு என குறிப்பிட்டுள்ள நிலையில், எவ்வளவு அளவு மது குடிக்கலாம் என்று பாட்டிலில் குறிப்பிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மதுக்கடைகள் எண்ணிக்கை குறைப்பது அரசின் கொள்கை முடிவு. இது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.