Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: 2வது சுற்றில் அல்காரஸ் சபலென்கா வெற்றி

நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று காலை மகளிர் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-1, 6-3 என ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவாவை வீழ்த்தினார். செக் குடியரசின் பார்போரா க்ரெஜ்சிகோவா 6-4, 6-2 என ஜப்பானின் மொயுகா உச்சிஜிமாவையும், கஜகஸ்தானின் எலினா ரைபகினா 6-3, 7-6 என செக் குடியரசின் தெரேசா வாலண்டோவாவையும், 5ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-1, 6-3 என ரஷ்யாவின் அனஸ்தேசியாவையும், 7ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி 6-3, 6-3 என அமெரிக்காவின் இவா ஜோவிக்கையும் வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தனர். கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் 2-6, 6-3, 6-2 என பிரான்சின் எல்சா ஜாக்குமோட்டையும், செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா 7-6, 6-2 என அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லரையும் வீழ்த்தினார்.

சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் 6-3, 6-3 என அமெரிக்காவின் ஆன்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். இதேபோல் லாட்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ 5-7, 1-6 என அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்டிம் வீழ்ந்தார். இதனிடையே தோல்வியின் விரக்தியில் ஜெலினா ஓஸ்டாபென்கோ, தன்னிடம் மோசமாக பேசியதாக டெய்லர் டவுன்சென்ட் குற்றம் சாட்டி உள்ளார். நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் 27 வயது அரினா சபலென்கா 7-6, 6-2 என ரஷ்யாவின் 22 வயதான போலினா குடெர்மெடோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் அல்காரஸ் 6-1, 6-0, 6-3 என இத்தாலியின் மத்தியா பெலூசியை எளிதாக வீழ்த்தினார். இத்தாலியின் லூசியானோ டார்டேரி, அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ, பிரான்சின் அட்ரியன் மன்னாரினோ ஆகியோரும் 2வது சுற்றில் வெற்றிபெற்றனர்.