Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஆலங்குளம்-சங்கரன்கோவில் சாலையில் 7 கி.மீ மட்டும் ஒரு வழித்தடமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி: குண்டும், குழி சாலையால் பஸ்கள் அடிக்கடி பழுது

ஆலங்குளம்: ஆலங்குளத்திலிருந்து கிடாரக்குளம், ஊத்துமலை வழியாக சங்கரன்கோவில் செல்லும் சாலையை 33 கி.மீ இருவழித்தட அமைக்கப்பட்டுள்ள நிலையில் 7 கி.மீ மட்டும் ஒரு வழித்தட சாலையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறுகிய சாலையில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அரசு பேருந்துகள் திடீர், திடீரென பழுதாவதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து குறிப்பன்குளம், கிடாரக்குளம், ஊத்துமலை வழியாக சங்கரன்கோவில் செல்லும் சாலை உள்ளது. சுமார் 40 கி.மீ.தூரம் செல்லும் இச்சாலை சங்கரன்கோவில் முதல் வீராணம் வரை இருவழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. வீராணத்தில் இருந்து குறிப்பன்குளம் வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரம் ஒரு வழிச்சாலையாகவும், குறிப்பன்குளம் முதல் ஆலங்குளம் வரை சுமார் 4 கி.மீ.தூரம் இருவழி சாலையாகவும் உள்ளது.

இந்த சாலையில் செல்லும் வாகனங்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் 40 கி.மீ நீளமுள்ள இந்த சாலையில் 7 கி.மீ மட்டும் ஒரு வழித்தடமாக உள்ளது. மேலும் இச்சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதால், பல இடங்களில் குண்டும், குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் ஒரு வாகனம் சாலையில் சென்றால் எதிரே வரும் வாகனம் சாலையோரத்தில் கீழே இறக்கினால் மட்டுமே அந்த வாகனம் செல்ல முடியும். அவசரமாக செல்வோர் இந்த சாலையில் வாகனங்களை முந்தி செல்ல முடியாத நிலை தான் இன்றளவும் உள்ளது. குறிப்பாக அவசரமாக நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் இந்த சாலை வழியாக சென்றால் மற்ற வாகனங்கள் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தினால் மட்டுமே, அவை செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் 7 கி.மீ நீள குண்டும், குழியுமான சாலையில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்று வருகிறது. இதனால் கால நேரம் வீணாவது மட்டுமின்றி எரிபொருளும் செலவாகிறது.

இந்நிலையில் கிடாரகுளம், அகரம் ஆகிய கிராம மக்கள் இந்தச் சாலையை இருவழிச் சாலையாக அமைத்து தர வேண்டும் என பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த சாலையில் நாரணம் மாள்புரம் விலக்கிலிருந்துநாச்சியார் புரம் விலக்கு வரை சுமார் 3 கி.மீ.தூரம் சாலை மிகவும் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக காணப்படுகிறது. குறுகிய சாலையாகவும், குண்டும் குழியுமாகவும் இருப்பதினால் இரவு நேரங்களில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. இதனால் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த சாலையால் ஆலங்குளம் செல்லும் அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகிறது. இதனால் ஆலங்குளம் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் இச்சாலையை விரிவுபடுத்தி புதிய சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7 கி.மீ சாலையை கடக்க 30 நிமிடம்

வடக்கு கிடாரக்குளத்தைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் கற்பகராஜா கூறுகையில், ‘இந்தச்சாலையில் கிடாரக்குளத்தில் இருந்து ஆலங்குளம் செல்வதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால் குண்டும், குழியுமாக சாலை இருப்பதினால் சுமார் 30 நிமிடம் வரை ஆகிறது. மேலும் கர்ப்பிணிகள், முதியோர்கள், நோயாளிகள் போன்றவர்களை எனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு இந்த வழியாக ஆலங்குளம் வருவதற்கு மிகவும் பயமாக உள்ளது. மேலும் இந்த சாலையில் ஒரு முறை சென்று வந்தால் எனது ஆட்டோவையும் பழுதுபார்க்கவேண்டியுள்ளது. ஆகையால் இரவு நேரங்களில் ஆலங்குளம் செல்வதென்றால் வீராணம் - அழகியபாண்டியபுரம் செல்லும் சாலையின் மூலம் நெட்டூர் வழியாக சுமார் 7 கி.மீ தூரம் சுற்றி ஆலங்குளம் செல்வேன்’ என்றார்.

சொந்த செலவில்தற்காலிகமாக சீரமைத்தபஞ். தலைவர்

இதுகுறித்து அகரம் பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி கூறுகையில், ‘இந்த சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசினேன். உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும் இந்தசாலை குறித்து மனு கொடுத்தேன். ஆனால் எந்த பயனுமில்லை. ஆகையால் என்னிடம் சொந்த டிராக்டர் இருப்பதால் எங்கள் கிராமத்தில் பழைய வீடுகள் இடித்து புதுப்பிக்கும் நபர்களிடம் இருந்து அங்குள்ள பழைய சிமெண்ட் கட்டிகள் போன்றவற்றை அள்ளி வந்து சிற்றாற்று பாலம் முதல் எங்கள் ஊரான அகரம் வரை இந்த சாலையிலுள்ள குண்டு, குழிகளை நிரப்பியுள்ளேன். இதுவும் மழையினால் பள்ளம் ஏற்படும் சூழ்நிலையில் உள்ளது’ என்றார்.