ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்: அதிமுக பாஜவின் கிளை கழகமாக செயல்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்து வந்தவர் மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். அதாவது ஓபிஎஸ் 2017ம் ஆண்டு சசிகலாவை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்தினார். அப்போது, அவருக்கு ஆதரவாக இருந்தவர் தான் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பாண்டியன்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட போதும் அவரின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். சட்டசபையிலும் ஓபிஎஸ் அணி எம்எல்ஏவாகவே செயல்பட்டு வந்தார். இவர் கடந்த சில தினங்களாக ஓபிஎஸ்ஸிடம் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார். இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அங்கு அவர் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பி.கே.சேகர்பாபு, கனிமொழி எம்பி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், வழக்கறிஞர் சலீம் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து கொண்டேன். காரணம் இன்று திராவிட கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கின்ற ஒரு தலைவராகவும், தமிழக உரிமைக்காக போராடக்கூடிய ஒரு தலைவராகவும், தமிழகத்தின் உரிமையை எங்கும் அடகு வைக்காத தலைவராகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். அதனால் நான் பார்த்து, சிந்தித்து எடுத்த தீர்க்கமான முடிவு தான் இது.
நான் என்னை இந்த இயக்கத்தில் இணைத்து கொண்டதற்கான காரணம், எஞ்சிய வாழ்க்கையிலும் இந்த திராவிட கொள்கையினை பாதுகாக்கக்கூடிய ஒரு இயக்கமாகவும், அதை தலைமையேற்று இருக்கக்கூடிய தலைவருடைய சிந்தனைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தொண்டனாகவும், என்னை இணைத்து பணியாற்ற இங்கே வந்துள்ளேன்.
அதிமுகவை தோற்றுவித்த தலைவரும், அதற்கு பின்னாலே அந்த இயக்கத்தை பாதுகாத்து வளர்த்த ஜெயலலிதாவும், எந்த சூழ்நிலையிலும் அந்த இயக்கத்தை எந்த இயக்கத்துக்கும் அடகு வைக்கவில்லை.
அதிமுக என்பது அவர்கள் காலத்தில் இருந்த அதிமுக இல்லை. இன்றைய அதிமுக என்பது வேறு ஒரு இயக்கத்தை நம்பி, அந்த இயக்கத்தின் சொல்படி தான் நடக்கக்கூடிய ஒரு துர்பாக்கியமான ஒரு சூழ்நிலை இருக்கின்றது. எந்த விதிகளை அதிமுக நிறுவன தலைவர் உருவாக்கினாரோ, அதனை காற்றில் பறக்கவிட்டு எந்த கொள்கைகளுக்காக அந்த இயக்கம் உருவாக்கப்பட்டதோ அதையும் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.
இந்த இயக்கம் பாஜவின் கிளை கழகமாக இங்கே செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் திராவிட கொள்கைகளை பறைச்சாற்றக்கூடிய பாதுகாக்கக்கூடிய ஒரு இயக்கம் திமுக என்று உணர்ந்து நான் இங்கே இணைந்துள்ளேன். என்னை பொறுத்தவரையில் சில நெருடல்கள் உண்டு தான். காரணம், நான் எடுத்து இருக்கின்ற நிலைப்பாடு என்பது உறுதியான நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
இதை உணர்ந்து இன்று அவர்களுடைய கொள்கையும், யார் தோற்க வேண்டும் என்று எடுத்து இருக்கிறார்களோ?, அந்த நபரை தான் தோற்கடிப்பதற்கும், நானும் என்னுடைய முயற்சியை எடுப்பேன். ஒரு இயக்கத்துக்கு உழைக்கக்கூடிய உழைப்பை அங்கீகரித்து, அங்கீகாரம் தராமல் அந்த உழைப்பை வேண்டாம் என்று ஒவ்வொரு தொண்டனையும் விரட்டக்கூடிய இன்றைய எடப்பாடி பழனிச்சாமியினுடைய நோக்கம் என்ன?.
அவருடைய நடைமுறை என்ன? அவருடைய சிந்தனை என்ன? என்பதை எல்லாம் உணர்ந்து தான் திமுகவில் இணைந்துள்ளேன். நான் இங்கே வந்த போது, என்னை இருகரம் வரவேற்று, நீங்கள் வாருங்கள், இந்த இயக்கத்துக்கு வாருங்கள் என்று என்னை பூண்முறுவலோடு, மகிழ்ச்சியாக இந்த இயக்கத்திற்கு வரவேற்று இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார்.
* பதவியை ராஜினாமா செய்தார்
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்ததை தொடர்ந்து ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ பதவியை மனோஜ் பாண்டியன் முறைப்படி ராஜினாமா செய்தார். பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் அப்பாவிடம் எழுதி தந்தார். அதை தொடர்ந்து அவருடைய பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
