ஆலந்தூர், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு: பொதுமக்களிடம் கலந்துரையாடி தீர்வுகளை வழங்கினார்
சென்னை: சென்னை ஆலந்தூர் மண்டலம், வாணுவம்பேட்டை, பழண்டியம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீபழண்டியம்மன் திருமண மண்டபம், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-195 துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள எலிம் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய இடங்களில் நேற்று நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை நேரில் பார்வையிட்டு மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி தீர்வுகளை வழங்கினார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை உள்ளிட்ட 13 அரசு துறைகள் மூலம் மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்பமும் வழங்கப்பட்டது.
மேலும் தூய்மைப்பணியாளர்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் விவரங்கள், நலத்திட்ட உதவிகளை பெற தேவைப்படும் ஆவணங்கள் குறித்த தகவல் தொகுப்பு கையேடு முகாமிற்கு வந்த தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. நேற்று நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துகள் வழங்கப்படுவதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும், சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். முகாமில் மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் துணை முதல்வர் கலந்துரையாடி தீர்வுகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், மண்டலக்குழு தலைவர் வி.இ.மதியழகன், மாமன்ற உறுப்பினர் க.ஏகாம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.