Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

குலசேகரம்: குமரியில் அலைபாயுதே பட பாணியில், காதலனை திருமணம் செய்த இளம்பெண் குட்டு அம்பலமானதால் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தாயாரை ஏமாற்றி சுவர் ஏறி குதித்து தப்பிய இளம்பெண் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த சுவாமியார்மடம் காட்டுவிளையை சேர்ந்தவர் சுந்தரேசன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி பிரேம குமாரி (58). இவர்களது மகள் அஸ்வதி (22). நர்சிங் முடித்து விட்டு, சுவாமியார்மடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அஸ்வதிக்கும் திருவட்டார் அடுத்த வியன்னூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (25) என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. இது அஸ்வதி தாயார் பிரேமகுமாரிக்கு தெரிய வந்தது. தனது மகளை கண்டித்த அவர், நான் பார்க்கும் மாப்பிள்ளையை தான் நீ திருமணம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

இதையடுத்து நெருங்கிய உறவு முறையில் உள்ள வாலிபரை அஸ்வதிக்கு திருமணம் செய்யும் ஏற்பாடுகளில் இறங்கினார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி தோழி ஒருவரை சந்திக்க செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த அஸ்வதி தோழிகள், நண்பர்கள் உதவியுடன் திருவட்டார் அருகே உள்ள கோயிலில் காதலன் ராஜேசை திருமணம் செய்து ெகாண்டார். பின் எதுவும் நடக்காதது போல் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர். அலைபாயுதே சினிமா பாணியில் காதலன் ராஜேஷ் கட்டிய தாலியை ஆடைக்குள் மறைத்தவாறு அஸ்வதி இருந்தார். 10 நாட்களுக்கு மேல் இவ்வாறு வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் 4 நாட்களுக்கு, முன் மகள் தூங்கி கொண்டிருந்த சமயத்தில் தாலியை பார்த்த பிரேமகுமாரி விசாரித்தபோது ரகசிய திருமணம் அம்பலமானது. இதனால் மகளை சரமாரியாக தாக்கி ஒரு அறையில் சிறை வைத்துள்ளார். 3 நாட்களாக அடைபட்டிருந்த அஸ்வதி, நேற்று முன்தினம் அதிகாலையில் தாயாரின் கவனத்தை திசை திருப்பி காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பினார்.

வக்கீல் நண்பர் ஒருவர் உதவியுடன் திருவட்டார் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசார் அஸ்வதியின் தாய் பிரேமகுமாரி, காதலன் ராஜேஷ் ஆகியோரை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பிரேமகுமாரி மகளை தன்னுடன் அனுப்பும்படி கூறி கதறினார். ஆனால் அஸ்வதி, ராஜேசை திருமணம் செய்துவிட்டேன், அவருடன் சேர்த்து வையுங்கள் என்றார். இதையடுத்து அஸ்வதியை போலீசார் ராஜேசுடன் அனுப்பி வைத்தனர்.