தீவிரவாதத்துடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு அல் பலா பல்கலைகழக நிறுவனர் ஜவாத்துக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
புதுடெல்லி: தீவிரவாதத்துடன் தொடர்புடைய பண மோசடி வழக்கு தொடர்பாக அல் பலா பல்கலைகழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் கடந்த 10ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து பரிதாபாத், அல் பலா பல்கலை வளாகத்தில் என்ஐஏ அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்தது தொடர்பான பணமோசடி வழக்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அல் பலா பல்கலைகழகம் பல்கலைகழக மானிய குழுவிடம்(யுஜிசி) இருந்து அங்கீகாரத்தை பெற்றதாக பொய்யாக கூறி மாணவர்களை சேர்க்க அதன் என்ஏஏசி அங்கீகார நிலையயை தவறாக குறிப்பிட்டதாக அமலாக்கதுறை முன்னர் குற்றம்சாட்டியது. கடந்த 2018 மற்றும் 2025க்கு இடையில் பல்கலைகழகம் ரூ.415 கோடி வருவாய் ஈட்டியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஜாவத் அகமது சித்திக்கை நேற்று கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஷீத்தல் சவுத்ரி பிரதான் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
* என்ஐஏ சோதனை
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஜம்மு-காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி தீவிரவாத தாக்குதல் குறித்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரிக்கிறது. இது தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காஷ்மீரின் புல்வாமா, ஷோபியன் மற்றும் குல்காம் மாவட்டங்களில் 8 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. கார் குண்டுவெடிப்புக்கு பின்னணியில் இருந்த, தீவிரவாதிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.


