கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் மூலம் மகிழ் முற்றத்தின் சார்பில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்று ஏற்கனவே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குறிஞ்சி மூலம் உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிற்கு, தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். ஆங்கில ஆசிரியர் சிந்தியா வரவேற்றார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக மக்கள் தொகை தினம் குறித்து பேசுகையில், ‘மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருவதே உலக மக்கள் தொகை நாளாகும்.
1987 ஆம் ஆண்டில் ஜூலை 11ஆம் நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியதால், ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் உலகமக்கள் தொகை நாள் கொண்டாடப்படுகிறது.
உலக மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்மையில் ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் உலக மக்கள்தொகை 2023 அறிக்கையின்படி உலக மக்கள் தொகையில் இந்தியா 142.86 கோடி மக்கள் தொகையுடன் முதலிடத்திலும், சீனா 142.57 கோடியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா மக்கள் தொகையில் முதலிடத்திலிருந்து வந்தது.
உலகம் முழுவதும் மிகப்பெரும் பிரச்சினையாக மக்கள் தொகை அதிகரிப்பு உள்ளது. அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிப்பது பொருளாதார ரீதியாகவும், மனிதவள ரீதியாகவும் நாட்டை பெரிதும் பாதிக்கும். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளது.
இந்த நிலையில் இயற்கை வளம், வேளாண் வசதிகள், உள்நாட்டு உற்பத்தி குறைவாக உள்ள நாடுகள் தங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பிற நாடுகளிலிருந்து இறக்குமதி மற்றும் உதவிகளை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதுதவிர, அதிகரித்து வரும் மக்கள் தொகையால் வாழ்விடங்களுக்காக இயற்கை வனப்பகுதிகள் அழிக்கப்படுதல், நகரமயமாக்கல் உள்ளிட்டவைகளை மேற்கொள்கின்றனர். உணவு உற்பத்தியையும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டிய தேவை எழுகிறது. மருத்துவ வசதி, சுகாதாரம் போன்றவையும் அனைவருக்கும் கிடைக்க முடியாத நிலை பல நாடுகளில் உள்ளன.
இதுபோன்ற பல காரணங்களால் உலகளாவிய அமைப்புகள் பலவும் மக்கள் தொகை கட்டுக்குள் இருப்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித்தார். கணிப்பொறி உதவியாளர் தையல் நாயகி நன்றி கூறினார்.