ஆகாஷ் பாஸ்கரன் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: அமலாக்கத்துறை மனு தள்ளுபடி; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்களை பறிமுதல் செய்ததாக விசாரணை அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு அதிகாரி நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறி ஆகாஷ் பாஸ்கரன் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அமர்வு, ‘‘ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. இதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போது இடைக்காலமாக எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கடந்த செப்டம்பர் 26ம் தேதி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்நய் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு ஆஜராக வாதாடினார். இதையடுத்து நீதிபதிகள், ஆகாஷ் பாஸ்கரன் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிடவோ அல்லது தடை விதிக்கவோ முடியாது. எனவே இதில் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை ஏற்க முடியாது என்பதால், தள்ளுபடி செய்கிறோம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

