அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில், அனுமதி பெறாமல் இசையமைப்பாளர் இளையராஜாவின் 3 பாடல்களை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில், சகலகலா வல்லவன் திரைப்படத்தில் இடம்பெற்ற இளமை இதோ இதோ, நாட்டுப்புற பாட்டு படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபாயும் தாரேன், விக்ரம் படத்தில் இடம்பெற்ற ‘‘என் ஜோடி மஞ்சக் குருவி’’ ஆகிய பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியுள்ளனர். 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாகக் கூறியிள்ளனர். ஆனால், அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை. எனது அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், படத்தில் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இளையராஜா சார்பில் வழக்கறிஞர் ஏ.சரவணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குட் பேட் அக்லி திரைப்படத்தில் அனுமதி பெறாமல் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.