புதுடெல்லி: இந்திய - அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் வினோத் கோஸ்லா, செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் உடனான நிகழ்ச்சியில் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் எதிர்காலம் குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அடுத்த 5 ஆண்டுகளில் மனிதர்கள் செய்யும் மதிப்புமிக்க பணிகளில் சுமார் 80 சதவீதத்தை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செய்து முடிக்கும். வரும் 2040ம் ஆண்டிற்குள் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் என்பதே மக்களுக்கு இல்லாமல் போய்விடும். சம்பளத்திற்காக அல்லாமல், தாங்கள் விரும்பிய பணிகளை மட்டுமே மக்கள் வேலை செய்வார்கள். இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சி ஆபத்தானதாகத் தோன்றினாலும், எதிர்காலத்தில் தற்போது கற்பனை செய்து பார்க்க முடியாத புதிய வேலைகளையும் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கும்’ என்று கூறினார்.
உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களைப் பெருமளவில் வேலையிலிருந்து நீக்கி வரும் சூழலில், கோஸ்லாவின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. பெரும் நிறுவனங்கள் இந்தப் பணிநீக்கத்தை பணியாளர் மறுசீரமைப்பு என்று கூறினாலும், இதன் பின்னணியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தரவு உள்ளீடு, வாடிக்கையாளர் சேவை (தானியங்கி உரையாடல்கள்), அடிப்படை அறிக்கை தயாரித்தல் மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற பல பணிகள் தானியங்கிமயமாக்கப்பட்டு, மனிதர்களுக்கான வேலை வாய்ப்புகளை குறைத்து வருவதால் எதிர்வரும் காலம் பலருக்கு வேலையிழப்பை ஏற்படுத்தும் என்றே பலரும் கூறி வருகின்றனர்.