புதுடெல்லி: நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த இருதினங்களுக்கு முன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “என் அனுமதியின்றி என் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பல்வேறு வலைதளங்கள் பயன்படுத்துகின்றன. மேலும், சில நிறுவனங்கள் அவர்கள் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்ய என் புகைப்படம், வீடியோக்களை பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது. என் அனுமதியின்றி என் புகைப்படங்கள், வீடியோக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த மனு நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒரு புகழ் பெற்ற ஆளுமையின் அடையாளங்களை அவர்களின் ஒப்புதலின்றி பயன்படுத்தும்போது, அது சம்பந்தப்பட்ட தனிநபருக்கு வணிக ரீதியாக தீங்கு விளைவிப்பதுடன், அந்த புகழ் பெற்ற ஆளுமை கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் பாதிக்கும். ஒருவரின் ஆளுமை உரிமைகளை அங்கீகரிக்கப்படாத முறையில் சுரண்டுவது தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் பார்த்து கொண்டு இருக்க முடியாது” என்று தெரிவித்த நீதிமன்றம், ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள், வீடியோக்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது.