Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொலை முயற்சி நோக்கத்தோடு தாக்குதலில் ஈடுபட்ட ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்ய வேண்டும்: விசிக வலியுறுத்தல்

சென்னை: டிஜிபி அலுவலகம் முன்பு கொலை முயற்சி நோக்கத்தோடு தாக்குதலில் ஈடுபட்ட ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்ய வேண்டும் என விசிக மாவட்ட செயலாளர் வலியுறுத்தியுள்ளார். நேற்று முந்தினம் டிஜிபி அலுவலகம் முன்பு நடந்த ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விசிகவினர் மோதல் குறித்து விசிக மாவட்ட செயலாளர் பி.சாரநாத் சம்பவத்தில் ஈடுபட்ட திலீபன் ஆகியோர் நேற்று மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நிருபர்களுக்கு திலீபன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை ராயப்பேட்டை பகுதியில் இஸ்லாமிய பெண் ஒருவரின் இடத்தை ஏர்போர்ட் மூர்த்தி அபகரிக்க முயற்சித்தார். அதை தடுக்கும் விதமாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினருக்கு எங்கள் தரப்பில் அழுத்தம் கொடுத்தோம்.

இதன் காரணமாக நேற்று முன்தினம் ஏர்போர்ட் மூர்த்தி நாங்கள் எப்போதும் கூடும் இடமான டிஜிபி அலுவலகம் முன்பு உள்ள டீக்கடைக்கு நேரில் வந்து இடத்தகராறு குறித்து எங்களிடம் பேசினார். அப்போது பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறிய நிலையில் ஏர்போர்ட் மூர்த்தி எங்கள் தரப்பினரை கொலை செய்யும் நோக்கத்தோடு கத்தியை கொண்டு தாக்க முற்பட்ட போது தற்காப்பிற்காக நாங்கள் அவரை தாக்கினோம். அப்போது அவர் வைத்திருந்த கத்தியால் எங்களை தாக்கினார்.கத்தியால் வெட்டுப்பட்ட காரணத்தால் கையில் 16 தையல் போடும் அளவிற்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளேன். மற்றொரு நபர் கையில் ஏர்போர்ட் மூர்த்தி கத்தியால் வெட்டியதால் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கே ஊடகங்கள் இருந்த காரணத்தால் நாங்கள் தப்பித்போம். இல்லையென்றால் ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் அவருடன் இரண்டு கார்களில் வந்த அவரது ஆட்கள் எங்களை ஏதேனும் செய்திருப்பார்கள். டீக்கடை மற்றும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தால் உண்மை என்னவென்று தெரியவரும். நாங்கள் டீ குடித்துக் கொண்டு இருந்த போது அங்கு எங்களை தாக்குவதை நோக்கமாகக் கொண்டு ஏர்போர்ட் மூர்த்தி நாங்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே காரினை கொண்டு வந்து நிறுத்தி எங்களிடம் வீண் தகராறு செய்தார். நில அபகரிப்பு செய்ய முற்பட்ட விவகாரம் குறித்து உங்களுக்கு எதற்கு இந்த வேலை என கேட்டு இதில் தலையிட வேண்டாம் என மிரட்டினார். பதிலுக்கு நாங்கள் பேசிய போது எங்களை கத்தியால் தாக்க முற்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து விசிக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சாரநாத் பேசியதாவது: காவல்துறை இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பது தவறானது. கொலை செய்யும் நோக்கத்தோடு வந்து ஏர்போர்ட் மூர்த்தி தாக்கினார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் அவரை கைது செய்ய வேண்டும். ஏர்போர்ட் மூர்த்தியை ஏன் காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை. இது போன்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.