Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விமான நிலையத்தில் ரூ.167 கோடி தங்கம் பிடிபட்ட விவகாரம் மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த முடிவு: சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்; கடத்தல் சம்பவ எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.167 கோடி தங்கம் பிடிபட்ட விவகாரத்தில் மேலும் 2 கடைகளில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தங்க கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில், ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்க கடத்தல் நடந்துள்ளதாக கூறி, சென்னை விமான நிலைய சுங்கத்துறை தனிப்படை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வரும் யூடியூபர் சபீர் அலி, இலங்கையைச் சேர்ந்த ட்ரான்சிட் பயணி, சபீர் அலியின் கடையில் பணியாற்றும் 7 பேர் என மொத்தம் 9 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கிடையே சென்னை விமான நிலைய சுங்கத்துறை சுய அதிகாரிகள் கொண்ட தனிப்படையினர், இதுசம்பந்தமாக மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் ஒரு சிலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தின் கமர்சியல் பிரிவில், இணை பொது மேலாளர் பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரியிடம், சுங்க அதிகாரிகள் குழுவினர் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அதோடு அவருடைய அலுவலகம் மற்றும் அந்த விமான நிலைய உயர் அதிகாரியின் காஞ்சிபுரம் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தினர்.

மேலும் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து, விமான நிலையங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தொடங்குவதற்கான உரிமங்கள் வழங்குவதற்கான அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனமான வித்வேதா பிஆர்ஜி பொது மேலாளரிடம் விசாரணையும், அவர்களுடைய அலுவலகங்களில் சோதனையும் நடந்தது. இதில் அந்த தனியார் நிறுவனத்தின் பொது மேலாளர் பிரித்வி பாஜ கட்சியைச் சேர்ந்தவர். இந்த சோதனைகளில் முக்கியமான ஆவணங்கள், பெருமளவு பணம், தங்கக் கட்டிகள் சிக்கியதா? என்பது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: இந்த சம்பவங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை, சோதனைகள் நடத்திக் கொண்டு இருக்கிறோம். சென்னை விமான நிலைய உயர் அதிகாரி ஒருவரிடம் விசாரணை நடத்தி, அவருடைய அலுவலகம் மற்றும் வீடு ஆகியவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் அதில் பெரியளவில் ஆவணங்களோ, பணம் பொருட்களோ கைப்பற்றப்படவில்லை. அதோடு இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அலுவலகத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

அதோடு இந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகளும் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே தனியார் நிறுவன அதிகாரிகள் இருவருக்கும் சம்மன் அனுப்பி, வரவழைத்து விசாரணை நடத்த இருக்கிறோம்.

மேலும் இதில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியை (பாஜ) சேர்ந்தவர் யாராவது சம்பந்தப்பட்டுள்ளனரா? என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால் நாங்கள் தங்கம் கடத்தல் ஒன்றையே குறிக்கோளாக வைத்து, விசாரணையை நடத்தி வருகிறோம். அரசியல் கட்சி ரீதியாக எந்த விசாரணையும் நாங்கள் நடத்தவில்லை. எங்கள் விசாரணைக்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லை. எங்களுடைய விசாரணை சுதந்திரமாக நடந்து வருகிறது.

அதோடு இந்த பரிசுப் பொருட்கள் கடையை மையமாக வைத்து, தங்கம் கடத்தும் சம்பவங்கள் நடந்துள்ளது என்பதை நாங்கள் கண்டுபிடித்த அதே தினத்தில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இத்தாலியா ஷூஸ், நேகா சில்க்ஸ் ஆகிய 2 கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே எங்களுக்கு அந்த இரு கடைகள் மீதும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கூடுதலாக மேலும் அந்த 2 கடைகளிலும் சோதனை நடத்த இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இவ்வாறு மேலும் 2 பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை நடத்தினால், சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ள தங்க கடத்தல் சம்பவங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.