மீனம்பாக்கம்: தீபாவளி பண்டியையொட்டி சென்னை நகரில் மாலை, இரவு நேரங்களில் பட்டாசு வெடிக்கப்பட்டதால் காற்றில் கடுமையான மாசு ஏற்பட்டது. இதனால், மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுபாதை பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. இதுபோன்ற சூழ்நிலை ஏற்படலாம் என கருதிய இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விமானங்கள் தரையிறங்குவது, புறப்படுவது கவனமாக கண்காணித்து செயல்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்குமேல் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானங்களுக்கு உடனடி அனுமதிகொடுக்காமல், ஓடு பாதைகளை உன்னிப்பாக கவனித்து தெளிவாக தெரிந்தால் மட்டுமே தரையிறங்க அனுமதித்தனர். அதுவரை விமானங்கள் வானில் வட்டமடித்து பறந்தன. இதுபோல் சென்னையில் இருந்து புறப்படவேண்டிய விமானங்களுக்கும் சிக்னல் கொடுக்காமல் ஓடுபாதை தெளிவாக தெரிந்தால் மட்டுமே அனுமதி அளித்தனர்.
இதனால் சென்னையில் தரை இறங்க வந்த ஐதராபாத், கவுகாத்தி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள், லக்னோ, மதுரை, டெல்லி, பெங்களூர், டாக்கா ஆகிய 7 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு தரையிறங்கின. இதுபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் டெல்லி, கொச்சி, பெங்களூர், கோவை, ஐதராபாத், தோகா, கோலாலம்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஐதராபாத் ஆகிய 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
பட்டாசு புகை மண்டலம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு 7 வருகை விமானங்கள், 8 புறப்பாடு விமானங்கள் என 15 விமான சேவை சிறிதளவு பாதிக்கப்பட்டது. ஆனால், விமானங்கள் தரையிறங்க முடியாமல் வேறு விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்புவது, ரத்து செய்யப்படுவது போன்ற பாதிப்பு எதுவும் இல்லை. விமானங்கள் தாமதத்தால் பயணிகள் சிரமப்பட்டனர்.