விமானநிலைய புறப்பாடு பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசலால் பயணிகள் அவதி: வெளியே செல்லும் வாகனங்கள் தாமதம்
மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய பன்னாட்டு முனைய புறப்பாடு பகுதிகளில் பயணிகளை இறக்கிவிடும் வாடகை கார்கள், சொந்த கார்கள் உள்பட அனைத்து வாகனங்களும், பயணிகளின் வருகை பகுதியான டெர்மினல் 2, உள்நாட்டு முனையமான டெர்மினல் 1, 4ல் பயணிகளை அவசரமாக இறக்கிவிட்டு, குறிப்பிட்ட 10 நிமிடங்களுக்குள் பார்க்கிங் கட்டணங்கள் இல்லாமல் விமான நிலையத்தைவிட்டு வெளியேறுவது வழக்கம். 10 நிமிடங்களுக்கு மேலாகும் ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் ரூ.75, ரூ.110 என பார்க்கிங் கட்டணங்கள் அதிகரித்து கொண்டிருக்கும். இதற்காக சோதனைசாவடியில் வழங்கப்பட்ட சிலிப்பில் உள்ள நேரத்தை பார்த்து, அதற்கான வாகன பார்க்கிங் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
இதற்காக விமானநிலைய போர்டிகோ பகுதியில் இந்திய விமானநிலைய ஆணையத்தின் ரெகவரி வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு, அங்கு நின்றிருக்கும் வாகனங்களை உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தி வருகின்றனர். எனினும், சமீபகாலமாக சென்னை விமான நிலையத்தில் ரெகவரி வாகனங்கள் அதிகளவில் ரோந்து பணிகளில் ஈடுபடுவதில்லை. இதனால் அங்கு பயணிகளை இறக்கிவிட வரும் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்பதால், பின்னால் வரும் வாகனங்கள் வெளியே செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. குறிப்பாக, நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதனால் உள்நாட்டு முனையம் மற்றும் பன்னாட்டு விமான முனையங்களில் வாகன நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள், மற்ற வாகனங்களுக்கு இடையூறாக நிற்பதை தவிர்க்க வேண்டும். அங்கு ரெகவரி வாகனம் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு, வாகன நெரிசல் ஏற்படுவதை தடுப்பதற்கு விமான நிலைய பாதுகாவலர்கள், போலீசார் ஈடுபடுவதற்கு விமானநிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.