விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.12.5 கோடி மதிப்பு ஈ சிகரெட்கள், மதுபாட்டில்கள் தீ வைத்து அழிப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும் ஈ சிகரெட்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள், சாதாரண சிகரெட் பாக்கெட்டுகளில் 85 சதவீதம் அளவுக்கு புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்ற எச்சரிக்கை விளம்பரங்கள் இடம்பெற வேண்டும். அவ்வாறு விளம்பரம் இடம்பெறாத சிகரெட் பாக்கெட்டுகள், மது குடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற எச்சரிக்கை விளம்பரம் இல்லாத மதுபாட்டில்கள் போன்றவைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களில் இவ்வாறு சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், பெருமளவு குவிந்து இருந்தன.
இந்த பொருட்கள் அனைத்தும் இந்திய சுங்க சட்டம் 1962ம் ஆண்டு விதிகளை மீறி கடத்தல்காரர்களால், சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்டவை. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.12.5 கோடி. அவைகளை சுங்க சட்ட விதிகளின்படி, அழிப்பதற்கு, சுங்க அதிகாரிகள் முடிவுகள் செய்தனர். அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு பாய்லர் ஆலைக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி கொண்டு செல்லப்பட்டது. பின்பு சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னிலையில், தன்னார்வ அமைப்பின் உதவியுடன் தீயில் எரித்து அழிக்கப்பட்டன. இந்த தகவலை சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.