சென்னை: நில ஆக்கிரமிப்பு வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை சென்னை ராயப்பேட்டை போலீசார் கைது செய்தனர். புரட்சி தமிழகம் கட்சி தலைவராக இருப்பவர் ஏர்போர்ட் மூர்த்தி. கடந்த செப்டம்பர் 6ம் தேதி சென்னை டி.ஜி.பி. அலுவலக நுழைவுவாயில் அருகே நின்று கொண்டிருந்தார். அவரை விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கினர். இதைத்தொடர்ந்து ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தினார். இந்த விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சாரா வஹாப் என்ற பெண்ணின் நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்கில் பரந்தாமன் என்ற புரட்சி தமிழகம் கட்சி நிர்வாகியை ஏற்கனவே போலீஸ் கைது செய்திருந்தது. அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ராயப்பேட்டை போலீசார் ஏர்போர்ட் மூர்த்தியை புழல் சிறையில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து ஏர்போர்ட் மூர்த்தி நீதிமன்ற காவலில் வைத்து விசாரிப்பதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏர்போர்ட் மூர்த்திக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி நீதிமன்ற காவலில் வைக்க மறுத்து உத்தரவிட்டார். எனவே ஏர்போர்ட் மூர்த்தி நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.