விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ நீட்டிப்புக்கு ரூ.1964 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை: விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.1964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1ல் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை மேம்பால சாலையுடன் இணைத்து நீடிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத் துறை செயலாளர் கோபாலிடம் மெட்ரோ நிர்வாகம் சமர்ப்பித்தது. சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க ரூ.9,335 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ வழித்தடத்தில் சென்னை விமான நிலையம், பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.
மேலும் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் வழியாகச் செல்லும், இது கிளாம்பாக்கம் பேருந்து முனையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இணைப்பை வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.46 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு கடந்த ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனை தொடர்ந்து, தற்போது நிலம் கையகப்படுத்துதல் உட்பட பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக ரூ.1,963.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.