Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பயணத்தில் குழந்தைக்கு குடிநீர் தர மறுப்பு; விமான நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்: நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி

தர்மசாலா: பஞ்சாப்பை சேர்ந்த சேர்ந்த தருண் குமார் சவுராசியா என்பவர், தனது குடும்பத்தினருடன் அம்ரிஸ்டரில் இருந்து பாங்காக் செல்வதற்காக தாய் லயன் ஏர் விமானத்தில் பயணம் செய்துள்ளார். ஆறு மணி நேரம் நீடித்த அந்தப் பயணத்தின்போது, தனது சிறு வயதுக் குழந்தைகளுக்குக் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். ஆனால், விமானப் பணியாளர்கள், ‘தண்ணீர் இலவசம் அல்ல; தாய்லாந்து கரன்சியான ‘பாட்’ கொடுத்தால் மட்டுமே தண்ணீர் தர முடியும்’ என்றும் கூறியுள்ளனர். அவரிடம் அந்த நாட்டின் நாணயம் இல்லாததால், குழந்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து, தருண் குமார் தர்மசாலாவில் உள்ள கங்கரா மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆணையம், விமான நிறுவனம் விசாரணைக்கு ஆஜராகாததால் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பை வழங்கியது. அதில், விமான நிறுவனத்தின் செயல்பாடு ‘சேவைக் குறைபாடு’ மற்றும் ‘அடிப்படை மனித உரிமை மீறல்’ என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது. மேலும், ‘ஆறு மணி நேர பயணத்தில் சிறு குழந்தைகளை தாகத்தில் தவிக்கவிட்டது கடுமையான மனித உரிமை மீறலாகும்’ என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட தருண் குமார் சவுராசியாவுக்கு மன உளைச்சலுக்காக ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது.