மீனம்பாக்கம்: துபாய் விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு திடீரென ஏர்இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் 172 பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து தினமும் மாலையில் துபாய்க்கு ஏர்இந்தியா விமானம் சென்றுவிட்டு, மீண்டும் நள்ளிரவில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.45 மணியளவில் சென்னை வருவது வழக்கம். இதேபோன்று நேற்று மாலை ஏர்இந்தியா விமானம் பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. இந்நிலையில், துபாய் விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 11.45 மணியளவில் சென்னைக்கு ஏர்இந்தியா புறப்பட தயாரானது. இதில் 172 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என மொத்தம் 179 பேர் அமர்ந்ததும், ஓடுபாதையில் விமானம் ஓட தொடங்கியது.
அப்போது இன்ஜின் பகுதியில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனே விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது. 172 பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, துபாய் விமானநிலைய ஓய்வறையில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் ஏர்இந்தியா விமானத்தில் ஏற்பட்டிருந்த இயந்திர கோளாறுகளை துபாய் விமானநிலைய பொறியாளர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், விமானத்தின் இயந்திர கோளாறுகளை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. இதனால் பயணிகள் துபாயிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த விமானம் பழுதுபார்க்கப்பட்ட பின்னர் சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயந்திர கோளாறை விமானி உரிய நேரத்தில் கண்டுபிடித்து தெரிவித்ததால், அதில் இருந்த 172 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என மொத்தம் 179 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


