சென்னை: சென்னை உட்பட முக்கிய நகரங்களில் நாம் சுவாசிக்கும் காற்றில் நுண்நெகிழிகள் பரவி நாம் நுரையீரலை நேரடியாக தாக்குவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் சென்னை, கொல்கத்தா, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நாம் சுவாசிக்கும் காற்றில் நுண்நெகிழிகள் பரவியுள்ளதாக ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. 10 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான சிறிய நெகிழித் தூள்கள் மனித நுரையீரலின் ஆழமான பகுதிக்குள் சென்றடைய கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எய்ம்ஸ் கல்யாணி மற்றும் சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து ஆய்வை நடத்தியுள்ளனர்.
சென்னையில் தி.நகர், பாரிமுனை போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட காற்று மாதிரிகளில் ஒரு கனமீட்டர் காற்றில் சராசரியாக 4 மைக்ரோ கிராம் நெகிழித் தூள்கள் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. துணிகளில் இருந்து உதிரும் பாலியஸ்டர், பாலித்தலின் மற்றும் டயர் ரப்பர் தூள்கள் ஆகியவை முக்கிய காரணமாக உள்ளன. சென்னையின் பெருங்குடி, கொடுங்கையூர் நெகிழி மறுசுழற்சி மையப் பகுதிகளிலும் இதற்கு பங்களிக்கின்றன. இந்த நுண் நெகிழிகள் ஈஎம், ஆர்சனிக் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகங்களையும் பூஞ்சை பாக்டீரியா போன்ற நோய் உண்டாகும் கிருமிகளையும் சுமந்து செல்கின்றன.
இவற்றை சுவாசிப்பதால் புற்று நோய், சுவாச கோளாறுகள் உள்ளிட்ட 72 வகையான நோய்கள் ஏற்படும் ஆபத்தை அதிகரிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றன. குப்பை சேகரிப்போர், சந்தை வியாபாரிகள் போன்றோர் நீண்ட நேரம் வெளிப்புறத்தில் இருப்பதால் இவர்களும் அதிக ஆபத்து உள்ளது. ஒரு நபர் சென்னையில் தினசரி சுமார் 190 நுண் நெகிழித் தூள்களை உள்ளிழுக்க நேரிடும் என்றும், இவை உடலில் குவிந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படும் ஆபத்தை உள்ளடக்கியவை என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றன.
