Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு

புதுடெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் வலயம் (என்சிஆர்) பகுதிகளில் நேற்று காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. வெயிலும் சற்று அதிகரித்து காணப்பட்டது. தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் முதலே வானம் மேகமூட்டமாக இருந்தது. அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், வானிலை கண்காணிப்பு நிலையம் கணிப்பின்படி நேற்று காலையில் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருந்தது. பிறகு வானம் தெளிவாக காணப்பட்டது. வெயிலின் தாக்கமும் உணரப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை 3.4 டிகிரி உயர்ந்து 21.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 0.3 டிகிரி உயர்ந்து 32.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 91 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 64 சதவீதமாகவும் இருந்தது.

இதே போன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது. காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு 335 புள்ளிகளாக பதிவாகி ‘மிகவும் மோசம்’ திருப்தி’ பிரிவில் இருந்ததாக ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவர தகவல்கள் மூலம் தெரிய வந்தது. இதன்படி, பூசா, ஷாதிப்பூர், டெல்லி பல்கலை. வடக்கு வளாகம், மந்திர் மார்க், சாந்தினி சௌக், ஆர்.கே.புரம், மேஜர் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம், கோகல்புரி லோதி ரோடு, ஸ்ரீஃபோர்ட், துவாரகா செக்டார் -8, அரபிந்தோ மார்க், மதுரா ரோடு, ஓக்லா பேஸ் -2, டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், ஆயாநகர், நொய்டா செக்டார் 125, ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்று தர குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், குருகிராம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தென்கிழக்கு டெல்லி ஆகிய இடங்களில் காற்று தர குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. ஆனால், நேரு நகரில் காற்று தர குறியீடு 411 புள்ளிகளாக பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது. இந்நிலையில், இன்று மேலோட்டமான பனி மூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.