நெல்லை: பாஜ கூட்டணியில் இருந்து விலகி தவெகவை கூட்டணியில் இணைப்பதற்கான நடவடிக்கையை எடப்பாடி எடுத்து வருவதாக வரும் தகவலுக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜ நிர்வாகிகளோடு நெல்லை உடையார்பட்டியில் உள்ள பாஜ அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ரூ.350 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி
விமான நிலையத்தை வரும் 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
ஜெயலலிதா பாஜ.,வுடன் கூட்டணி வைக்கும்போது அன்வர் ராஜா அதிமுகவில்தான் இருந்தார். இப்போது என்ன பிரச்னை அவருக்கு வந்தது என தெரியவில்லை. அதிமுக - பாஜ கூட்டணி அமைந்ததிலிருந்து பலரும் பயத்தில் உள்ளனர். பாஜ கூட்டணியில் இருந்து விலகி தவெகவை கூட்டணியில் இணைப்பதற்கான நடவடிக்கையை எடப்பாடி எடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுவது அர்த்தமற்றது. தரமான அரசியல் விமர்சகர்களாக இருந்தால் இது போன்ற கருத்துக்களை அவர்கள் தெரிவிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.