54வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி வரும் 17, 18 தேதி அதிமுக பொதுக்கூட்டங்கள்: சேலத்தில் எடப்பாடி பேசுகிறார்
சென்னை: அதிமுகவின் 54வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக 54வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, வருகிற 17, 18ம் தேதி `அதிaமுக 54வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ அதிமுக அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடக்கிறது.
மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை, எம்பி, எம்எல்ஏக்கள், எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப்பிரிவு உள்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும்.
17ம் தேதி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி, ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். சேலம் புறநகர் மாவட்டத்தில் 17ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.