சேலம்: சேலத்திற்கு குழந்தை தத்தெடுக்க வந்தவர்களிடம் பணம் பறித்த கும்பல் தலைவனான அதிமுக நிர்வாகி, இன்ஸ்பெக்டர் எனக்கூறி ரூ.3 லட்சத்தை பறித்த போலி இன்ஸ்பெக்டர் கைது செய்யபபட்டனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இனாம் கரிசல்குளம் குருசாமிபுரத்தை சேர்ந்தவர் பாதமுத்து (43). ஐஸ்கிரீம் வியாபாரி. இவரது மனைவி பூண்டிமாதா வீட்டிலேயே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். திருமணமாகி 23 ஆண்டுகளான நிலையிலும் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதுகுறித்து பூண்டிமாதா, அவரது சித்தப்பா மகள் செல்வியிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இவருக்கு தெரிந்த சேலத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சேலத்திற்கு வந்தால் சட்டப்படியாக குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளலாம் என அவர் கூறியதையடுத்து கடந்த 11ம் தேதி ரூ.3 லட்சத்தை ஏற்பாடு செய்து கொண்டு காரில் வந்தனர். கருப்பூர் அருகே அருண்குமாரிடம் பணத்தை கொடுக்கும் போது, காரில் வந்த கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் ஈரோடு கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என கூறி அவர்களிடம் இருந்த ரூ.3 லட்சத்தை பறித்து சென்றுவிட்டனர். இதுதொடர்பாக கருப்பூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் 2வது தெருவை சேர்ந்த மதுராஜ்(37), சண்முகாநகர் 1வது தெரு வசந்தம் நகரை சேர்ந்த ஏசுராஜ்(27) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.
இக்கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட சேலம் மாநகர மாவட்ட அதிமுக மாணவரணி இணை செயலாளர் அருண்குமார் (28), அவரது கூட்டாளி பழனிபாரதி (26) ஆகியோர் நேற்று முன்தினம் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து இன்ஸ்பெக்டர் செல்வராணி விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்ஸ்பெக்டராக நடித்தவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் வெற்றிவேல் (48) என்பவரை கைது செய்தனர்.
இவர் தான் ஈரோடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் என கூறி பணத்தை பறித்துள்ளார். இவரது தந்தை மாரிமுத்து சேலம் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி 2003ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். கும்பல் தலைவன் அருண்குமாருக்கு, வெற்றிவேல் தாய்மாமன் உறவு முறையாகும். இவரை போலீசாக நடிக்க வைத்ததும் தெரியவந்தது. பணத்தை பறித்து சென்ற வெற்றிவேல், இதுபாவப்பட்ட பணம் என தனக்கு கிடைத்த பங்கான ரூ.50ஆயிரத்தை பூஜை அறையில் வைத்ததாக கூறி அதனை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதுவரை ரூ.3 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளைக்கு பயன்படுத்திய 2 காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் 3 பேரையும் நேற்று மாலை 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் கொள்ளையடித்து சென்றது ரூ.5 லட்சம் என தெரியவந்துள்ளது. தற்போது ரூ.3 லட்சம் மீட்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக இருக்கும் தாதகாப்பட்டியை சேர்ந்த அஜய்(எ)பிரதீப் என்பவரிடமும் பணம் இருக்கும் என போலீசார் கருதுகின்றனர். அவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.


