கோவை: அதிமுக ஒன்றிணைய பொறுத்திருக்க வேண்டும் என்று செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு நேற்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னை செல்கிறேன். சென்னையில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு, நாளை தொகுதியில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளேன். இரவே சென்னையில் இருந்து கோபி திரும்ப இருக்கிறேன்’’ என்றார்.
அதிமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது எந்த நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு, ‘‘நீங்கள்தான் சொல்ல வேண்டும்’’ என பதில் அளித்தார். எடப்பாடி பழனிசாமி உங்களுடைய எந்த கருத்திற்கும், பதில் தெரிவிப்பது இல்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது இல்லையே. என்னுடைய கருத்தை மட்டும் தான் என்னிடம் கேட்க வேண்டும் என்றார். டெல்லி சென்று வந்த பின்னரும் ஒன்றிணைக்க வேண்டும் என நீங்கள் கூறியது நடக்கவில்லையே என்ற கேள்விக்கு, ‘‘பொறுத்து இருக்க வேண்டும், நல்லதே நடக்கும்’’ என பதிலளித்தார். எவ்வளவு நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் என்ற கேள்விக்கும், ‘‘பொறுத்து இருக்க வேண்டும். நல்லதே நடக்கும்’’ என மீண்டும் பதிலளித்தபடி சென்றார்.