தூத்துக்குடி: நெல்லையில் இருந்து சென்னை செல்வதற்காக தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு நேற்று காலை 11.30 மணிக்கு வந்த தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ அளித்த பேட்டி: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டெல்லி சென்றது தொடர்பாக நான் பதில் சொல்ல முடியாது. ஹரித்துவார் கோயிலுக்கு செல்வதாகத்தான் அவர் முதலில் கூறியிருந்தார்.
உங்களுக்கு தெரிந்தது போல்தான் எனக்கும் தெரியும், வேறு எதுவும் எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என ஏற்கனவே நான் பேசியிருக்கிறேன். நேற்று முன்தினம் மதுரையிலும் இதே கருத்தை குறிப்பிட்டுள்ளேன். டிடிவி தினகரன் அழைத்தால் நானே நேரடியாக போய் அவரை சந்தித்துப் பேசத் தயாராக இருக்கிறேன் என பலமுறை கூறியிருக்கிறேன் அவ்வளவுதான். தேவைப்பட்டால் நானே சென்று அழைப்பு கொடுப்பேன்.
பாஜ கூட்டணியில் அதிமுக இருந்து வருகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவெடுத்து அக்கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை உடனடியாக சென்று சந்திக்க முடியாது. டெல்லிக்கு நாளை (இன்று) சென்று பா.ஜ., அகில இந்திய பொறுப்பாளர்களை சந்திக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.