சென்னை: அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் நேற்று தவெகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கே.ஏ.செங்கோட்டையன் கோரிக்கை வைத்தார். இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனிடம் இருந்த கட்சி பதவிகளை பறித்தார். பசும்பொன்னில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். எனவே செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இதையடுத்து செங்கோட்டையன் நேற்று முன்தினம் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு சென்று அவருடன் நேற்று முன் தினம் மாலை செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் நேற்று காலை 9.15 மணிக்கு பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். காலை 11 மணிக்கு தவெக தலைவர் விஜய் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் முறைப்படி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இதை தொடர்ந்து சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த வெங்கடாச்சலம், பாஜவில் இருந்தார். நேற்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்யாமல் திடீரென்று செங்கோட்டையனுடன் இணைந்து விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். மேலும், புதுச்சேரி முன்னாள் பாஜ தலைவர் சுவாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்எல்ஏ அசன்னா ஆகியோரும் அந்த கட்சியில் சேர்ந்தனர்.
* பொய்யும்... உண்மையும்
தவெகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, ‘‘அண்ணனை பற்றி எல்லோருக்கும் தெரியும், இந்தியா முழுவதும், தமிழ்நாடு முழுவதும், அதனால் தான் நேற்று கூட பார்த்திருப்பீர்கள். தேசிய கட்சியில் இருந்து, ஆளும் கட்சி வரைக்கும் அண்ணன் பின்னாடி முழுவதும் இருந்தார்கள்’’ என்றார். அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் செங்கோட்டையன் கூறுகையில், ‘திமுகவினரோ, தேசிய கட்சியினரோ, மாற்றுக் கட்சியினர் யாரும் என்னை சந்திக்கவில்லை’ என்று அடுத்த சில நிமிடங்களில் மறுத்தார். ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று பழமொழி உண்டு. ஆனால், இந்த பொய்யோ உடனே வெளிச்சத்துக்கு வந்து விட்டது’ என்கின்றனர் அதிமுகவினர்.
* பவுன்சர்கள் தொடர்ந்து அடாவடி; பத்திரிகை கேமராமேன் படுகாயம்
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு, உள்ளே செங்கோட்டையன் சென்றார். அவரை பின்தொடர்ந்து படமெடுத்தபடி பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி கேமராமேன்களும் உள்ளே செல்ல முயற்சித்தனர். அப்போது, தவெக தலைமை அலுவலக பாதுகாப்பு பணிகளில் தனியார் நிறுவன பவுன்சர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி கேமராமேன்களை உள்ளே விட மறுத்து தள்ளிவிட்டனர். இதில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதங்களும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டுள்ளது. இதில் தனியார் தொலைக்காட்சி கேமராமேனை பவுன்சர்கள் தாக்கியதில், அவரது தலையின் பக்கவாட்டு பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆதவ் அர்ஜுனா உள்பட பலர் வந்து, பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டனர்.
* செங்கோட்டையனுக்கு தவெகவில் 2 பதவிகள்
தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘ ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட எனது கண்காணிப்பில் இயங்கும் உயர்மட்ட மாநில குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமிக்கப்படுகிறார். அவர் எனக்கு உறுதுணையாக இருப்பார். மேலும் கூடுதலாக ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்,’என்று கூறப்பட்டுள்ளது.

