Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுகவில் இருந்து வெளியேறுகிறார் செங்கோட்டையன்?; எடப்பாடி பழனிசாமி மீது தொடர் அதிருப்தி எதிரொலி: கோபியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை

கோபி: எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து வெளியேறி தனி அணியாக செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக 5ம் தேதி மனம் திறக்க உள்ளதாக செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியுடன் சமீப காலமாக கருத்து வேறுபாட்டில் இருந்து வரும் முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன், கடந்த பிப்ரவரி 9ம் தேதி அன்னூரில், எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த அத்திகடவு அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான பாராட்டு விழாவில், விழா மேடை உள்ளிட்ட எந்த ஒரு இடத்திலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறாததால் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக கூறி மோதலை வெளிப்படுத்தினார். அதைதொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தார்.

தொடர்ந்து கோபி, அத்தானி உள்ளிட்ட இடங்களில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்களில் பேசும் போது, பாஜவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும், ஒன்றுபட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றும் சூசகமாக பேசி வந்தார். அதை தொடர்ந்து டெல்லியில் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்ததும், கோவை வழியாக திரும்பாமல் மதுரை விமான நிலையம் வழியாக திரும்பியதும் அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதுவரையில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனின் திடீர் போர்க்கொடியால் பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதிமுக, பாஜ கூட்டணி அறிவிப்பிற்கு பிறகு செங்கோட்டையன் மவுனம் காத்து வந்தார். ஆனாலும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மூன்றாம் கட்ட நிர்வாகி போன்ற மன நிலையிலேயே செங்கோட்டையன் கலந்து கொண்டு வந்தார்.

இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அதிமுக பிரசார பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கிய போது, எடப்பாடியில் இருந்து கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார். அப்போது, குள்ளம்பாளையத்தில் உள்ள வீட்டில் இருந்த செங்கோட்டையன், அவரை வரவேற்க செல்லாததுடன், அவரது பிரசார கூட்டங்களிலும் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். மேட்டுப்பாளையத்தில் தொடங்கி தற்போது வரை நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்ட நிலையில் செங்கோட்டையன் தொடர்ந்து தவிர்த்தே வருகிறார்.

இந்நிலையில் செங்கோட்டையனின் நடவடிக்கையினால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, கட்சியில் செங்கோட்டையனுக்கு அளித்து வந்த முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்தார். மேலும், செங்கோட்டையனின் கருத்தை கூட கேட்காமலும், கடந்த தேர்தலில், அந்தியூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இஎம்ஆர் ராஜா கட்சிக்கு துரோகம் இழைத்ததாலேயே அதிமுக தோல்வியுற்றதாக இஎம்ஆர்.ராஜா மீது செங்கோட்டையன் குற்றம் சாட்டி இருந்த நிலையில், இஎம்ஆர். ராஜாவிற்கு, அனைத்து உலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இது இருவருக்குமிடையே பனிப்போரை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் அதிமுக வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம் கோபியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த போது, நிர்வாகிகளை அழைக்காமலேயே கூட்டம் நடத்துவதாக அத்தானியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்த அதை தொடர்ந்து செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அந்த நிர்வாகியை கடுமையாக தாக்கி மண்டபத்தை விட்டு வெளியேற்றினா். இந்த பிரச்னையை கூட எடப்பாடி பழனிசாமி, அவருக்கு வேண்டிய ஆட்கள் மூலமாக கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக செங்கோட்டையன் தரப்பில் கூறப்பட்டது.

நேற்று காலை முதல் குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டின் முன்பு செய்தியாளர்கள் காத்திருந்த நிலையில் வீட்டை விட்டு கட்சி அலுவலகம் வந்த செங்கோட்டையன், வரும் 5ம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாகவும், அதுவரை அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறிச்சென்றார். தொடர்ந்து கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்ற செங்கோட்டையன் அங்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

சுமார் 4 மணி நேரம் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட செங்கோட்டையனிடம், கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது, எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி குறித்தும், அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை இணைக்க திட்டம் உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 5ம் தேதி அனைத்திற்கும் பதில் அளிக்கிறேன். அதுவரை ஒத்துழைப்பு அளியுங்கள் என்று கூறிச்சென்றார்.இந்நிலையில் செங்கோட்டையனிடம் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அவர்களிடமும் இதே கருத்தை செங்கோட்டையன் கூறியதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் கட்சியில் இருந்து வெளியேறி, சசிகலா, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோரை இணைத்து தனி அணியாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது இந்த நடவடிக்கை அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.