நன்றி பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது: அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜ இல்லை, 122 எம்எல்ஏக்கள்; எடப்பாடிக்கு டிடிவி தினகரன் பதிலடி
தஞ்சாவூர்: அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜ இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள் 122 பேர் தான். நன்றி பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என எடப்பாடிக்கு டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். தஞ்சாவூரில் அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நன்றியை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் கிடையாது. நான் முதலமைச்சராக இருந்தபோது ஆட்சியை கவிழ்க்க சதி நடந்தது. அப்போது டெல்லி பாஜ தான் எங்களை காப்பாற்றியது. அந்த நன்றிக்காக பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என எடப்பாடி பேசியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார். பின்னர் அவரை மாற்றிவிட்டு சசிகலா முதலமைச்சராக வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் கவர்னரிடம் மனு அளித்தனர். ஆனால் அதற்குள் வழக்கு ஒன்றில் சசிகலா சிறைக்கு சென்றார். அதற்கு முன்பு எடப்பாடியை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்று சசிகலா கூறினார். அதன்படியே எடப்பாடி முதலமைச்சராக ஆனார். டெல்லி பாஜ கூறியது எனக்கூறி என்னை போன்றவர்களை கட்சியை விட்டு வெளியேற்றினார். அப்போது பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். பன்னீர்செல்வத்திற்கு பின்னால் யார் நின்றது என உலகத்திற்கே தெரியும்.
அப்போது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜ இல்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் 122 பேர். தன்மானம் தான் முக்கியம் என பேசும் பழனிசாமி, தற்போது ஏன் டெல்லி சென்றார். 18 எம்எல்ஏக்கள், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று மனு அளிக்கவில்லை. பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று தான் ஆளுநரிடம் மனு அளித்தனர். வாக்கெடுப்பின் போது பழனிசாமி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த 12 சட்டமன்ற உறுப்பினர்களும் அன்று யார் பேச்சை கேட்டு வாக்களித்தார்கள் அதை அவர் மறந்துவிட்டார்.
வாக்கெடுப்பின் போது 122 எம்எல்ஏக்களில் எத்தனை பேர் பிச்சுக்கொண்டு போக இருந்தார்கள். அவர்களை யார் தடுத்து நிறுத்தியது. செம்மலை எல்லாம் தாண்டி குதித்து ஓடினார். பழனிசாமி என்றால் நாங்கள் இருக்க மாட்டோம் என்றார். ஆட்சியை காப்பாற்ற 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது பழனிசாமி. எனவே நன்றிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை. எஸ்டிபிஐ மாநாட்டில், பாராளுமன்ற தேர்தலில் மட்டும் இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜ கூட்டணிக்கு செல்ல மாட்டோம் என தெரிவித்தார். தன்மானம் தான் முக்கியம் என்று பேசும் பழனிசாமி, டெல்லியில் தலைமை கழக கட்டிடத்தை பார்க்க போகிறேன் என்று கூறிவிட்டு, 6 கார்கள் மாறி திருட்டுத்தனமாக அமித்ஷாவை சந்தித்து வந்தார்.
காந்தியின் பேரப்பிள்ளை மாதிரி பேசி, மற்றவர்களை தாக்கி பேச கூடாது. உங்களை தாக்கி பேசினால் முக்காடு போட்டு, வெளியே வர முடியாது. பாஜவிற்கு நன்றியாக இருப்பதாக கூறிவிட்டு செங்கோட்டையனை மறைமுகமாக குற்றம் சாட்டுகின்றார். சில கைக்கூலிகள் செயல்படுகிறார்கள் என கூறுகிறார். செங்கோட்டையன் யாருடைய கைக்கூலி, டிடிவி தினகரன் கூலியா, ஓபிஎஸ் கைக்கூலியா. செங்கோட்டையன் யாரை அடிக்கடி சந்திக்கிறார். எங்கே சந்திக்கிறார். பழனிசாமி முன்னுக்கு பின் முரணாக பேசுவது தோல்வி பயத்தில் உளறுகிறதுபோல் தெரிகிறது. எங்களது கூட்டணி நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதத்தில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
* ‘பழனிசாமி உடன் செல்வதற்கு தூக்கு மாட்டி தொங்குவோம்’
டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், 2026 தேர்தலில் பழனிசாமி தோற்கடிக்கப்படுவார். தமிழ் மக்கள் நிச்சயமாக புறந்தள்ளுவார்கள். துரோகத்தை ஏற்று கொண்டு அவர்களின் கூட்டணியில் நாங்கள் எப்படி இருக்க முடியும். பழனிசாமி கூறுகிறார், பிரமண்டமான கட்சி வரப்போகிறது என்று. ஒருவேளை இலங்கை அல்லது ஆந்திராவில் இருந்து ஏதும் கட்சி வரப்போகிறதா என்று தெரியவில்லை. இந்த முறை பழனிசாமி படுபாதாளத்திற்கு தள்ளப்படுவார். ஜெயலலிதா கட்சி தோற்றால் அதற்கு டிடிவி தினகரன், எங்களை சேர்ந்தவர்கள் காரணம் இல்லை. நயினார் நாகேந்திரன் எனது பழைய நண்பர். அவர் தற்போது மாற்றி மாற்றி பேசி வருகிறார். அமித்ஷா, என்றைக்குமே பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என சொன்னது கிடையாது. பழனிசாமி உடன் செல்வதற்கு பதில் நாங்கள் தூக்கு மாட்டி கூட தொங்கி கொள்வோம். டிசம்பர் மாதத்தில் அமமுகவிற்கு சிறப்பான கூட்டணி அமையும் என்றார்.
* கூவத்தூரில் எடப்பாடி கதறியது தெரியுமா?
டிடிவி தினகரன் பேட்டியின் போது கூறுகையில், ஜெயலலிதா மறைந்த பிறகு பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என சசிகலா முடிவு செய்தார். முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக கூவத்தூரில் முகாமிட்டு இருந்த 122 சட்டமன்ற உறுப்பினர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழனிசாமி என்றால் நாங்கள் இருக்க மாட்டோம் என்றனர். அப்போது சசிகலாவிடம், நான் தான் முதலமைச்சர் என்று கூற வேண்டாம், யாரும் கையெழுத்து போட மாட்டார்கள் என பழனிசாமி தெரிவித்தார். அப்போது வாக்கெடுப்பின் போது அவரை காப்பாற்றியது நாங்கள் தான். ஆனால் அவர் முதல்வராக பதவியேற்றதும் எங்களையே கட்சியிலிருந்து நீக்கிவிட்டார் என்றார்.