மதுரை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துள்ள நிலையில், அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பெரும்பாலானோருக்கு பிடிக்கவில்லை. நிர்வாகிகளும் தாமரை இலையில் ஒட்டாத தண்ணீரை போலத்தான் இருக்கின்றனர். மேலும், திராவிட சிந்தாந்தாத்தில் தோன்றிய அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து காவிமயமாகி வருகிறது என நடுநிலையாளர்கள், அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளிக்கையில், அதிமுகவை ஆர்.எஸ்.எஸ் வழிநடத்தினால் என்ன என பதில் கூறியிருந்தார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பேட்டி அளித்தார். அப்போது, ‘ஆர்எஸ்எஸ் வலிமை பெறுவதற்கு அதிமுக துணை போகிறதா என ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, அதிமுக தனது கொள்கையில் இருந்து என்றும் வழுவாது; தவறாது. அது எல்லோருக்கும் தெரியும், நாங்கள் யாருக்கும் எஜமானர் இல்லை. அடிமையும் இல்லை என்றார்.