மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரையில் இன்று செய்தியாளர்ளிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் மக்களின் அடிப்படை தேவைகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதி பணிகளும் நடைபெறவில்லை. எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தின்போது, பதிவுத்துறையில் ஒரு பத்திரம் பதிவதற்கு 10 சதவீதம் பணம் பெறப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். எந்த பத்திர அலுவலகத்தில் 10 சதவீதம் லஞ்சம் பெறப்படுகிறது என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பத்திரப்பதிவு துறையில் எந்தெந்த இடத்தில் எவ்வளவு ஊழல் நடைபெற்றது என்பதை என்னால் கூற முடியும். சிபிஐ வழக்குகள் நடந்து வரும் நிலையில் அது குறித்து விரிவாக நான் கூற விரும்பவில்லை. திமுக ஆட்சியில் எந்த நிலமும் முறைகேடாக பதிவு செய்யப்படவில்லை. எந்த சார்பு பதிவாளர் தவறு செய்திருந்தாலும் அதை சுட்டிக்காட்டினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை இல்லாத அளவில் கடந்த 4ம் தேதி தமிழக வரலாற்றிலேயே ரூ.274 கோடி அளவிற்கு ஒரே நாளில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் பதிவுத்துறை ஆண்டு வருமானம் ரூ.8 ஆயிரம் கோடி முதல் ரூ.9 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் கடந்தாண்டு ரூ.24 ஆயிரம் கோடி வரை வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்தாண்டு ரூ.26 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.