Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அதிமுக இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சி.வி.சண்முகத்துடன் நயினார் திடீர் சந்திப்பு

திண்டிவனம்: அதிமுக இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சி.வி.சண்முகத்துடன் நயினார் திடீரென சந்தித்து பேசினார். தமிழகத்தில் தேஜ கூட்டணியில் பாஜ, அதிமுக அங்கம் வகித்துள்ளன. இந்த கூட்டணியில் யார் முதல்வர்? என்ற குழப்பம் நீடித்து வருகின்றது. எடப்பாடி நான்தான் முதல்வர் வேட்பாளர் என கூறி வருகிறார். ஆனால், பாஜ தலைமை அதை ஏற்கவில்லை. எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் கூட்டணிக்கு வர மாட்டேன் என்று டிடிவி.தினகரன் மிரட்டி வருகிறார்.

இந்த சூழலில், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பிரிந்து சென்றவர்கள், அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதற்காக பாஜவின் தயவை அதிமுக தலைவர்கள் நாடி உள்ளனர். இந்நிலையில், பாஜவால் தோற்றோம் என பேசிய சி.வி.சண்முகம், இப்போது எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்து மோடியை தூக்கி பிடித்து ஜிங், ஜாங்க் அடித்து வருவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்று செங்கோட்டையனுடன் சென்று எடப்பாடியிடம் வலியுறுத்திய சி.வி.சண்முகம், தற்போது நீ யாருடா கட்சியில் சேர்க்கச் சொல்ல என்று ஓபிஎஸ், டிடிவி மீது ஒருமையில் கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிடிவிக்கு ஆதரவாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு உள்ள நிலையில், சி.வி.சண்முகம் நேர் எதிரான கருத்துகளை வெளியிட்டதால், அவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பேசியிருப்பதாக தகவல் பரவின. இந்த சூழலில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மொட்டையன் தெருவில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இல்லத்திற்கு நேற்று 12:30 மணியளவில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென வருகை தந்தார். அங்கு சி.வி.சண்முகத்துடன் அவர், அரை மணிநேரம் தனிமையில் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வெளியே வந்த நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் இருந்து பெரம்பலூரில் நடைபெறும் பாஜ ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றபோது வழியில் தம்பி சி.வி.சண்முகத்தை சந்தித்தேன். இருவரும் அண்ணன்- தம்பி போல் அடிக்கடி சந்திப்போம். ஒருதாய் வீட்டு பிள்ளைகள். கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் சந்திப்போம் என்றார்.