Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

5 மாதத்துக்கு முன் இறந்தவருக்கு ஒன்றிய பொருளாளர் பதவி: எடப்பாடி அறிவிப்பு; அதிமுகவினர் அதிர்ச்சி

கோபி: ஐந்து மாதங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு அதிமுகவில் பதவி வழங்கியுள்ள எடப்பாடியின் நடவடிக்கையால் கோபி அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததற்காக கே.ஏ.செங்கோட்டையன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் அடுத்தடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த பதவிகளுக்கு எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளை அறிவித்து வருகிறார்.

அதன்படி நேற்று அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலில், 5 மாதங்களுக்கு முன் உயிரிழந்த ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். கோபி அருகே உள்ள நம்பியூர் ஒன்றிய பொருளாளராக எஸ்.கே.செல்வராஜ் என்பவரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஆனால், அவர் 5 மாதங்களுக்கு முன்பாகவே உயிரிழந்து விட்டதாகவும், இதைக்கூட விசாரிக்காமல் நிர்வாகிகள் நியமனத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருவதாக செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அளவிற்கு அதிமுக அவல நிலைக்குச்செல்லும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இறந்தவருக்கு, ஒன்றிய பொருளாளர் பதவி வழங்கப்பட்டு இருப்பது ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

* ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவுக்கு 42 புதிய நிர்வாகிகள்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. சத்தியபாமா,ஒன்றிய செயலாளர்கள் தம்பி என்கிற சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன் உள்ளிட்ட 13 பேரின் கட்சி பதவிகளையும், அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்ட 40 பேரின் கட்சி பதவிகளையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். இந்நிலையில், தற்போது ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதில், புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இணைச்செயலாளராக கோபி நகராட்சி முன்னாள் தலைவர் ரேவதி தேவியும், பொருளாளராக நடுப்பாளையம் சந்திரசேகர் உட்பட 42 புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அதேசமயம் செங்கோட்டையனிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி இருப்பதால்தான் புதிதாக யாரையும் நியமிக்கப்பாமல் மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜை பொறுப்பு மாவட்ட செயலாளராக்கியதாக கூறப்படுகிறது.