திருச்சி துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் அணைகட்டு பகுதியில் அண்மையில் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது.
அதனை பார்த்து கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, "அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார்" என மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று திருச்சி மாவட்டம் துரையூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். இந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்த நிலையில், அதை மறித்த அதிமுகவினர் ஓட்டுநரை தாக்க முயன்றுள்ளனர்.
ஆம்புலன்ஸ் டிரைவர், நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை எடுத்து கூறினார். ஆனால், அங்கு இருந்த அதிமுகவினர் அதை கேட்காமல் அவரை தாக்க முயன்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. துறையூர் நகர அதிமுக செயலாளர் பாலு உள்ளிட்ட 14 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.