கோபி: அதிமுகவில் திட்டமிட்டபடி ஒருங்கிணைப்பு நடக்குமா? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரபரப்பு பதிலளித்தார். கோபியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் நேற்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். ஆனால், இவற்றிற்கு எல்லாம் ஒற்றை வார்த்தையில் பொறுத்திருந்து பாருங்கள் என செங்கோட்டையன் பதில் அளித்தார்.
அடுத்த கட்ட முடிவு எதுவும் எடுக்கவில்லை, ஆதரவாளர்கள் பதவிநீக்கம் செய்யப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் விரைவில் நன்மை கிடைக்கும், எடப்பாடி பழனிசாமியிடம் ஒருங்கிணைப்புக்கான எந்த அறிகுறியும் இல்லாததைபோல் என்னிடத்திலும் எந்த ரியாக்சனும் இருக்காது. இந்த அமைதி வெற்றிக்கான அறிகுறி. திட்டமிட்டபடி ஒருங்கிணைப்பு நடக்குமா? என எனக்கு தெரியாது என்றார்.
கடந்த மாதம் கோபி வந்த எடப்பாடி பழனிசாமியை வரவேற்க செல்லாதது குறித்து பதில் அளித்தபோது, அப்போது தான் சென்னையில் இருந்ததாக கூறினார். வரும் 8ம் தேதி பிரசாரத்திற்கு வரும் எடப்பாடியை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு மறுபடியும் அவர் வருவது குறித்த தகவல் தனக்குத் தெரியாது என கூறினார். ஓபிஎஸ்-ஐ சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் எனக்கூறிய செங்கோட்டையன், வழி தெரியாமல் செங்கோட்டையன் தவிக்கிறாரா? என்ற கேள்விக்கு வழிகாட்டியாக எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கிறார்கள் அவர்கள் வழியில் சென்று கொண்டிருக்கிறேன் என பதிலளித்தார்.
முன்னதாக, கரூர் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த செங்கோட்டையன், கரூர் சம்பவம் உண்மையிலேயே வேதனை அளிக்கக்கூடிய ஒன்று. இதயமே வெடித்து விடும்போல் இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணம்பெற வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் தமிழக மக்கள், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.