கோபி: ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தேனா என்பது குறித்து செங்கோட்டையன் விளக்கமளித்து உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன் அவ்வாறு ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ளாவிட்டால் அந்த பணியை நாங்களே செய்வோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஒருங்கிணைப்பு நடவடிக்கையை அவர் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்ற அவர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று காலை கோபியில் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது ‘சென்னை கோட்டூர்புரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததாக கூறப்படுகிறதே?’ என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு செங்கோட்டையன் கூறியதாவது: நேற்று முன்தினம் நான் பல்வேறு விளக்கங்களை சொன்ன பிறகு, வேண்டுமென்றே சிலர் வதந்திகளை பரப்பி வருவது உண்மையிலேயே வேதனை அளிக்கக்கூடிய ஒன்று. தெளிவாகவே நேற்று முன்தினம் அரசியல் சந்திப்பு யாரிடமும் இல்லை என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மனைவியை சந்திக்கவும், சொந்த வேலையை முடித்துவிட்டு கோபி திரும்பினேன் என்றும் கூறினேன்.
2 நாட்களாக கோபியில் உள்ள மக்களின் குடும்பத்தில் துக்க நிகழ்வுகளில் கலந்துள்ளேன். ஆனால் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். இது உண்மையிலேயே வேதனை அளிக்கக்கூடிய ஒன்று. என்னுடைய நோக்கம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலிமை பெற வேண்டும். எம்.ஜிஆர்., ஜெயலலிதா கனவு நிறைவேற வேண்டும். கோடிக்கணக்கான தொண்டர்கள் தியாகம் வெற்றி வாகை சூட வேண்டும் என்பதுதான். இதுபற்றி 5ம் தேதி விளக்கமாக கூறினேன்.
அதன்பிறகு எந்த கருத்தையும் நான் வெளிப்படையாக யாரிடத்திலும் கலந்தாலோசிக்கவில்லை. யாரையும் அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. கோட்டூர்புரத்தில் சந்தித்ததாக வேண்டுமென்றே வதந்திகளை பரப்புபவர்களுக்கு என்னால் பதில் கூற முடியாது. அது போன்ற நிகழ்வு நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார். டிடிவி, ஓபிஎஸ் சந்திப்பு குறித்து கேட்டதற்கு, வதந்தி பரப்புகிறார்கள் என்று செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க சென்றபோது போது கூட ஹரித்துவார் கோயிலுக்கு போறேன் என சொல்லிவிட்டு, அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து விட்டு வந்து பேட்டி கொடுத்தார். இதேபோல், இன்னும் சில நாட்களில் டிடிவி, ஓபிஎஸ் சந்திப்பு குறித்து மனம் திறந்து சொல்வார் என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.