அதிமுக தலைமை அலுவலகம் உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சல் அனுப்பியவருக்கு போலீஸ் வலை
சென்னை: சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் முடிந்தால் காப்பாற்றி கொள்ளுங்கள் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலக ஊழியர்கள் உடனே ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன்படி போலீசார் மற்றும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. அதேபோல், பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கம், அண்ணா சாலையில் உள்ள பிஎன்என்எல் தொலை தொடர்பு நிறுவனம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், பரங்கிமலை காவல் பயிற்சி மையம், நடிகர் எஸ்.வி.சேகர் வீடு உள்பட 10 இடங்களுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர். ஆனால் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.