திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் மண்டபம் காமராஜர் சிலையை மறைத்து அதிமுக ராட்சத பேனர்: அகற்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூரில் பிரசித்தி பெற்ற வடிவுடையம்மன் கோயில் வாசலில் 16 கால் மண்டபம் அருகில் காமராஜர் சிலை உள்ளது. காமராஜர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், அச்சிலைக்கு பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி, காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இன்று காலையிலும் திருவொற்றியூரை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள், காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர். அப்போது 16 கால் மண்டபம் மற்றும் காமராஜரின் சிலையை மறைத்தபடி அதிமுகவினரின் 20 அடி அகலம் கொண்ட ராட்சத பேனர் வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே முக்கிய பிரமுகர்கள், ‘இப்படி சிலையை மறைத்தபடி அதிமுகவின் பேனரை வைப்பதற்கு எப்படி அனுமதி வழங்கினீர்கள்’ என மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். மேலும், ‘இனி இங்கு அரசியல் கட்சியினரின் பேனரை வைக்க அனுமதிக்க கூடாது’ என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், மண்டபத்தை மறைத்தபடி வைத்துள்ள அதிமுக பேனரை பார்த்து முகத்தை சுளித்தபடி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குள் சென்றனர். இந்நிலையில், அதிமுகவினரின் ராட்சத பேனரை உடனடியாக அகற்ற மாநகராட்சி மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் அரசியல் கட்சியினரின் பேனர்களை வைப்பதற்கு அனுமதி வழங்க கூடாது என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.