Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுகவில் ஓரங்கட்டப்படும் மாஜி அமைச்சர்கள்: காரில் ஏற வந்த செல்லூர் ராஜூவை கீழே இறக்கிவிட்டு அவமதித்த எடப்பாடி: தென்மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி

மதுரை: கட்சியின் மூத்த நிர்வாகியான செல்லூர் ராஜூவை தனது காரில் ஏறவிடாமல் இறக்கிவிட்ட எடப்பாடி பழனிசாமியின் செயலால் தென்மாவட்ட அதிமுகவினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் தலைமை பொறுப்பிற்கு வந்த பிறகு மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டுவதாக கட்சியினர் மத்தியில் பேச்சு உள்ளது. குறிப்பாக சசிகலா, டிடிவி.தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் விவகாரங்களில் இவர்கள் சார்ந்த சமூகத்தினராக உள்ள மூத்த நிர்வாகிகளை எடப்பாடி கண்டு கொள்வதில்லை என்றும், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றும், மூத்த நிர்வாகிகளுக்கு எதிரானவர்களை கட்சிக்குள் வளர்த்து விடுவதாகவும் கூறுகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா ஆகியோர் தனித்தனி அணியாக இருந்து அரசியல் செய்துவருகின்றனர். இவர்களில் யார் பெரியவர் என்ற அரசியல் யுத்தம் செல்லூர் ராஜூவிற்கும், உதயகுமாருக்கும் இடையே போய் கொண்டிருக்கிறது. அதே நேரம் சசிகலா மற்றும் ஓபிஎஸ் விவகாரங்களில் செல்லூர் ராஜூ தரப்பு அடக்கி வாசிப்பதும், உதயகுமாரோ விமர்சனத்தின் உச்சிக்கே சென்று தாக்குவதும் எடப்பாடியின் கவனத்திற்கு சென்றுள்ளது.

இதேபோல் விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை கட்சியினர் மத்தியில் ராஜேந்திரபாலாஜி செல்வாக்குடன் உள்ளார். இதை விரும்பாத அவரது எதிர்தரப்பு அங்கு அவருக்கு எதிராக ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளராக இருந்த ராஜவர்மன், மாஜி அமைச்சர்கள் மாபா.பாண்டியராஜன் மற்றும் வைகை செல்வன் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை மாஜி அமைச்சர் பாஸ்கரன் தரப்பை புறக்கணித்துள்ள எடப்பாடி, தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவான செந்தில்நாதன் தரப்புக்கு முக்கியத்துவம் ெகாடுத்து வருகிறார். மாஜி அமைச்சரான பாஸ்கரனை கண்டுகொள்வதில்லை. குறிப்பாக கடந்த வாரம் சிவகங்கை மாவட்ட சுற்றுப்பயணத்திற்காக எடப்பாடி வந்தபோது கூட பாஸ்கரன் தரப்பை கண்டுகொள்ளவே இல்லை.

பேசிய இடத்திலும் அவரது பெயரை உச்சரிக்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பாஸ்கரனை சந்தித்து நலம் விசாரிக்கவில்லை. இப்படித்தான் சிவகங்கை மாவட்ட அரசியலை எடப்பாடி எதிர்கொள்கிறார். ராமநாதபுரத்திலோ மூத்த நிர்வாகியான அன்வர்ராஜாவை கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் திமுகவிற்கு சென்று விட்டார். மற்றொரு மாஜி அமைச்சரான மணிகண்டன் தரப்பிற்கும் எடப்பாடி தரப்பு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

மாறாக தற்போதைய மாவட்ட செயலாளரான முனியசாமி தரப்பை மட்டுமே கையில் வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அணுகுமுறை தென்மாவட்ட அதிமுகவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 30ம் தேதி சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள அகழாய்வு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். முன்னதாக மடப்புரத்தில் இருந்து வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, கீழடி எல்லையில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

அதிமுகவினரின் வாழ்த்து கோஷத்தை கேட்டதும் எடப்பாடி பழனிசாமி தனது காரை நிறுத்தினார். அவரிடம் செல்லூர் ராஜூ பூங்கொத்து மற்றும் சால்வையை கொடுத்து வரவேற்று பேசினார். அவரைத் தொடர்ந்து கூடியிருந்த கட்சியினர் எடப்பாடிக்கு சால்வைகள் ெகாடுத்து வரவேற்றனர். அப்போது செல்லூர் ராஜூ, கூட்டத்தை விலக்கிக் கொண்டு எடப்பாடி பழனிசாமியின் காரில் ஏறி உட்கார்ந்து கொள்வதற்காகச் சென்றார்.

பின்புற கார் கதவை திறந்து உள்ளே சென்று உட்கார முயன்ற போது, முன்சீட்டில் இருந்த எடப்பாடியிடம் பாதுகாவலர்கள் சொல்ல, பின்னால் திரும்பி கையை காட்டியவாறு, ‘‘வேண்டாம்.... வேண்டாம்..... அண்ணே.... அண்ணே.... பின்னால அந்த வண்டில.... அதுல வாங்க... அதுல வாங்க, அடுத்த வண்டில வாங்கண்ணா...’’ எனக் கூறிய படி, தனது காரில் ஏறவிடாமல் செல்லூர் ராஜூவை தடுத்து நிறுத்தினார்.

இதை சற்றும் எதிர்பாராத செல்லூர் ராஜூ, காரின் பின்புற கதவை மூடி விட்டு, இறுகிய முகத்துடன் கூட்டத்திற்குள் இருந்து வௌியில் வந்தார். அப்போது மற்றவர்கள் எடப்பாடியை வரவேற்றுக் கொண்டிருந்தபோது செல்லூர் ராஜூ எடப்பாடியை கண்டுகொள்ளாமல் மனவேதனையில் திரும்பி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* காரில் ஏற்றாதது ஏன்? செல்லூர் ராஜூ விளக்கம்

எடப்பாடி அவமதித்தது குறித்து செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, ‘‘எடப்பாடி பழனிசாமிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பில் இருந்து இசட் பிரிவு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காகவே என்னை காருக்குள் ஏற்றவில்லை. காரினுள் பாதுகாவலர்கள் இருந்ததால் அடுத்த காரில் ஏறி சென்றேன்’’ என்றார்.

* புறக்கணிப்பு ஏன்?

மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்துமுன்னணி சார்பில் முருகன் மாநாடு நடந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் இருந்து ரூ.200 கோடி கொள்ளை போனதாகவும், பாஜவை சேர்ந்தவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் பாஜ வக்கீல் ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவு வெளியிட்டார். அது செல்லூர் ராஜூவுக்கு சொந்தமானது என்று தகவல் பரவியது. இந்த பணம் தேர்தல் செலவுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்பு பணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், செல்லூர் ராஜூ உறவினர் ஒருவர் தனது வீட்டில்தான் ரூ.45 லட்சம் கொள்ளை போனதாக போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக செல்லூர் ராஜூவின் முன்னாள் டிரைவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவரத்தை தன்னிடம் உடனே சொல்லாததால் செல்லூர் ராஜூ மீது எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருந்துள்ளார்.  இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவரை எடப்பாடி புறக்கணித்து வந்தார்.

போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல சென்றபோதுகூட செல்லூர் ராஜூவை அழைத்து செல்ல வேண்டாம் என எடப்பாடி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் சிலர் மட்டுமே சென்றனர்.

அதோடு சமீபத்தில் அளித்த பேட்டியில், ஓபிஎஸ் மற்றும் டிடிவிக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தும் பேசினார். இதுவும் எடப்பாடிக்கு அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தியது. இதுபோன்ற செயல்கள் தான் செல்லூர் ராஜூவை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து புறக்கணிப்பதும், அவருக்குப் போட்டியாக உதயகுமார் மற்றும் சிலரை முன்னிறுத்தி வருவதாகவும் அதிமுகவினர் கூறுகின்றனர்.