மதுரை: மதுரை, அண்ணாநகர் யாகப்பாநகர் மெயின் ரோட்டில் சக்திமாரியம்மன் கோயில் தெருவில் அதிமுக மாஜி கவுன்சிலர் சுசீந்திரனுக்கு சொந்தமாக 3 மாடி வீடு உள்ளது. பழமையான கட்டிடம் என்பதால் மாடி வீடுகளில் ஆட்கள் இல்லாத நிலையில், தரைத்தளத்தில் உள்ள வீட்டில் மட்டும் அபுபக்கர் என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார்.
அபுபக்கரின் சகோதரியான விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த ஜெமீலா(60), கண் அறுவை சிகிச்சைக்காக பேரக்குழந்தைகள் யாஸ்மின், தவ்ஹீத்சுலைமான் ஆகியோருடன் வந்து அபுபக்கர் வீட்டில் தங்கியிருந்தார்.
அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், ராஜபாளையம் செல்ல முடிவு செய்த ஜெமீலா, தம்பி அபுபக்கரிடம் தகவல் தெரிவித்துவிட்டு செல்வதற்காக நேற்று மாலை வீட்டுக்கு வந்திருந்தார். மாலை 4 மணியளவில் திடீரென 3 மாடி கட்டிடம் சரிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் இடிபாடுகளில் ஜெமீலா உயிரிழந்தார். படுகாயங்களுடன் 2 பேரக்குழந்தைகளை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..