கோவை: எடப்பாடி பழனிசாமி குடும்ப அரசியல் செய்வதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டி உள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 5ம் தேதி மாஜி அமைச்சர் செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து அவர் வகித்து வந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும், அவரது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்சி பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்தார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள மதுரை சென்ற செங்கோட்டையன், அங்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் பயணித்தார். டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.
இதனால், கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக கூறி செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதிர்ச்சியடைந்த செங்கோட்டையன், 3 நாட்களுக்கு முன் குள்ளம்பாளையத்தில் உள்ள வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து 53 ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வரும் தனக்கு விளக்கம் கேட்டு எந்தவித நோட்டீசும் வழங்காமல் சர்வாதிகாரமாக எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கி இருப்பதாகவும், அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளராக மட்டுமே உள்ளதாகவும், அவரை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் தன்னை கட்சியை விட்டு நீக்கியது தொடர்பாகவும், அவரது பொதுச்செயலாளர் பதவி குறித்தும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று காலை குள்ளம்பாளையம் வீட்டிலிருந்து கிளம்பிய செங்கோட்டையன் கார் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். பின்னர் விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். சென்னையில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்துவிட்டு வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், என்னை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இன்றுவரை ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்.
இப்போது வருகின்ற பிரச்னைகளை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கும்போது, இன்று இவருடைய (எடப்பாடி பழனிசாமி) அரசியலில் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்கள் தலையீடுகள் இருப்பது என்பது நாடறிந்த உண்மை. ஒருவருடைய வாழ்க்கை, அரசியலை பொறுத்தவரை பல்வேறு கருத்துகளை பரிமாறினாலும் கூட, இந்த இயக்கத்திற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து இன்று வரையிலும் இயக்கம் வலிமை பெற வேண்டும், இந்த இயக்கம் நாளை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் என் பணிகளை நான் மேற்கொண்டு வருகிறேன். தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி, தன்னையும் ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றக்கூடாது என்பதுதான் தத்துவம். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
* ஜனநாயகத்தை வளர்க்க பாடுபடுகிறாராம்: எடப்பாடியின் சேவைக்கு நோபல் பரிசு வழங்கலாம்; ஆர்.பி.உதயகுமார் காமெடி
மதுரை: எடப்பாடியின் சேவைக்கு நோபல் பரிசு வழங்கலாமென ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் நேற்று அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது: டிடிவி.தினகரன், திடீரென அதிமுகவை காப்பற்ற புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் எடுப்பது பழைய படம், புதிய பிரிண்ட். அவரின் படம் மக்களிடம் ஓடாது. அதிமுகவை மீட்டு தாருங்கள் என தொண்டர்கள் யாரும் அவரிடம் கேட்கவில்லை. ஒரு தேர்தலில் கூட அமமுக வெற்றி பெறவில்லை. தேர்தலில் டிடிவி.தினகரன் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார். அவரது கொள்கை, கோட்பாடு, லட்சியம் எங்களுக்கு தேவை இல்லை. மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதிமுக வேண்டாம் எனக்கூறி, அமமுகவை தொடங்கிய டிடிவி.தினகரன் இன்று தாய் வீட்டுக்கு வர வேண்டுமென பேசுகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் சேவைக்கு நோபல் பரிசு கொடுத்தாலும் கொடுக்கலாம். ஆனால், வரலாற்றில் துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுத்ததில்லை. தமிழகத்தில் ஜனநாயகத்தை வளரச் செய்ய எடப்பாடி பழனிசாமி பாடுபட்டு வருகிறார். எடப்பாடிக்கு அவர் பெற்றெடுத்த பிள்ளை உதவி செய்து வருவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. அவ்வாறு உதவி செய்வது சட்டவிரோதம் கிடையாது. இதனை சிலர் வேறு பார்வையில் பார்த்தால் அதற்கு நாம் பொறுப்பாக முடியாது. செங்கோட்டையன் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என எனக்கு எப்படி தெரியும்? செங்கோட்டையன் பின்புலத்தில் யார் இருந்தால் எனக்கென்ன? இவ்வாறு கூறியுள்ளார்.
 
 
 
   