கோபி: அதிமுகவில் பிளவு ஏற்படுத்தியது எடப்பாடி பழனிசாமி தான் என ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் எம்.பி. சையத்கான் குற்றம் சாட்டினார். அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக போர்க்கொடி தூக்கி உள்ள செங்கோட்டையனை ஓபிஎஸ், டிடிவி ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த தேனி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான சையத்கான் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர், குள்ளம்பாளையத்தில் உள்ள வீட்டில் செங்கோட்டையனை சந்தித்தனர்.
பின்னர் சையத்கான் கூறியதாவது: மீண்டும் அதிமுக வெற்றிபெற வேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக அலுவலகத்தை தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அதற்கு காரணமே அவர் தான். யார் வந்தாலும் தாக்குதல் நடத்த சொல்லி அடியாட்களை நிறுத்தி வைத்தது எடப்பாடி பழனிசாமி. நாங்கள் சென்றபோது அவர்கள் தான் தாக்கினார்கள். ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா அதிமுக தொண்டர்களுக்கு கோயில் போன்றது. அங்கு கொலை, கொள்ளை நடந்தது. ஆவணங்கள் தூக்கிச் செல்லப்பட்டுள்ளன. இந்த வழக்கை தமிழக அரசு தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுகவில் பிளவுகளை உருவாக்கியது எடப்பாடி பழனிசாமி தான். ஏகப்பட்ட துரோகம் செய்துவிட்டு இந்த நிலைமைக்கு வந்துள்ளார். ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் நான்கு பேரும் விரைவில் சந்திக்க இருக்கிறார்கள். அதிமுகவை ஒருங்கிணைத்து மீண்டும் ஜெயிக்க வைப்போம். இவ்வாறு கூறினார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரனும் செங்கோட்டையனை ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
* ஓபிஎஸ் - இபிஎஸ்சை இணைத்து பிளக்ஸ்
சென்னையிலிருந்து ஓபிஎஸ் நேற்று முன்தினம் இரவு பெரியகுளத்திற்கு திரும்பியிருந்தார். நேற்று காலை அவரை சந்தித்த செய்தியாளர்கள், ‘‘அதிமுக அலுவலகத்தை தாக்கியவர்களை கட்சியில் எப்படி சேர்க்க முடியும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே’’ என கேட்டபோது, அவர் பதிலளிக்காமல் மவுனமாக வீட்டிற்குள் சென்று விட்டார். இதற்கிடையே பெரியகுளம் நகரின் முக்கிய பகுதியான மூன்றாந்தல் காந்தி சிலை பின்புறம், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி உடன் ஓ.பன்னீர்செல்வம் கைகுலுக்குவது போல படம் அச்சிட்டு பிளக்ஸ் வைத்தனர். அந்த பேனரில், தமிழகத்தை காப்போம், கழகத்தை ஒன்றிணைப்போம், பிரிந்துள்ள தொண்டர்களை தலைவர்களே, ஒன்று சேருங்கள், 2026ல் வென்றிடுவோம் எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த பேனரால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.