Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுகவை மக்கள் விரைவில் ஆம்புலன்சில் அனுப்புவார்கள்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு

சென்னை: அதிமுக கட்சியே விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் ரூ.28.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது: 120 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை, இன்று முதல் சைதாப்பேட்டை மக்களுக்கு மட்டுமின்றி, இந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அத்தனை பொதுமக்களுக்கும், மிகவும் பயன்பெறுகின்ற வகையில் அமைந்திருக்கிறது. ரூ.240 கோடி செலவில், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, முதல்வர் சொன்ன பத்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு, இன்றைக்கு பொதுமக்கள் மிகுந்த பயன் பெற்று வருகிறார்கள்.

கோவிட் காலத்தில், மக்களுக்கு மருத்துவ சேவைகள் வீடு தேடி செல்ல வேண்டும் என்று முதல்வர், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். திமுக அரசு மருத்துவ துறையில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பல்வேறு திசைகளில் இருந்து விருதுகளும், பாராட்டுகளும், அங்கீகாரங்களும் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். சமீபகாலமாக 10 நாட்களுக்கு முன்பாக என்ன நடந்தது என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் நடுரோட்டில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கு நோயாளிகளை ஏற்றிக் கொண்டு வந்திருந்த ஆம்புலன்ஸ் வண்டியை நுழையவிடாமல், அதற்கு என்னவெல்லாம் தடைகள் செய்ய முடியுமோ, அதை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவருக்கு நான் தெரிவித்துக் கொள்வது, நீங்கள் இன்றைக்கு ஆம்புலன்ஸ் வண்டிகளை எல்லாம் நிறுத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உங்களுக்கு ஒன்று புரியவில்லை. உங்களுடைய கட்சியே, இயக்கமே விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள்.

விரைவில் ஐசியூவில் தான் உங்களுடைய இயக்கம் அனுமதிக்கப்படும் என்பதை தெரிவித்து, உங்களையும் காப்பாற்றுகின்ற இந்த பொறுப்பை முதல்வர் செய்வார் என்று நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, அரவிந்த்ரமேஷ், க.கணபதி, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், மண்டல குழு தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.துரைராஜ், நொளம்பூர் வெ.ராஜன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.