புழல்: புழல் 24வது வார்டில் வசிக்கும் அதிமுக கவுன்சிலரின் காரை ஷெட்டில் நிறுத்தி வைத்துள்ளார். அந்த காரின்மீது நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி, அதன் பின்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி சென்றனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 24வது வார்டில் கிழக்கு வட்ட அதிமுக செயலாளர் இ.சேட்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், இவர் நேற்றிரவு தனது வீட்டின் அருகே திருவள்ளூர் தெரு பூங்கா எதிரே தனக்கு சொந்தமான ஷெட்டில் காரை நிறுத்தி பூட்டிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை கவுன்சிலர் சேட்டு காரை எடுக்க சென்றுள்ளார். அப்போது, அவரது காரின் பின்பக்க கண்ணாடி உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியானார்.
அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை சிலர் ஆய்வு செய்தபோது, ஷெட்டில் நின்றிருந்த காரின் பின்பக்கத்தில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் கற்கள் மற்றும் ஆயுதங்களால் சரமாரி தாக்கி உடைத்துவிட்டு தப்பி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் அதிமுக கவுன்சிலர் சேட்டு புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.