Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுகவுக்கு அறுவை சிகிச்சை செய்யும் பாஜக: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டம் விமர்சனம்

செங்கல்பட்டு: பாஜகவின் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐ.சி.யூ.வில் சேர்க்கப்படும் நிலையில் உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்தார். தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளைச் சந்திக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்; இந்தியாவில் அதிகமாக தமிழ்நாட்டில் உயர்கல்வியில் 75% பேர் சேர்ந்துள்ளனர். 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

விடுபட்ட தகுதிவாய்ந்த அனைவருக்கும் விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். விடுபட்ட தகுதிவாய்ந்த மகளிருக்கு ஒன்று அல்லது 2 மாதத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். மகளிர் விடியல் பேருந்தில் இதுவரை 780 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். காலை உணவு திட்டத்தால் தமிழ்நாட்டில் 22 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். காலை உணவுடன் தாமான கல்வியை வழங்கி வருவதாக பெற்றோர்கள் தமிழ்நாடு அரசை பாராட்டுகின்றனர். பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக நமது திராவிட மாடல் அரசு திகழ்கிறது.

இரண்டு திமுக தொண்டர்கள் சந்தித்தால் கட்சிப் பணி குறித்து பேசுவார்கள். அதே இரு அதிமுக தொண்டர்கள் சந்தித்தால் இருவரும் பேசாமல், எந்த கோஷ்டியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என அவர்களுக்குள் சந்தேகம் இருக்கும். உலகத்திலேயே தங்கள் கட்சி சிக்கல்களுக்காக இன்னொரு கட்சித்தலைவரை பஞ்சாயத்து செய்ய அழைக்கும் அதிமுகவினரை போன்ற நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது. எடப்பாடி சுற்றுப்பயணத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நடுரோட்டில் கூட்டம் நடத்தும்போது ஆம்புலன்ஸ் வர தான் செய்யும். ஆம்புலன்சிற்கு வழி விடுபவர்கள் தான் உண்மையான தலைவர்கள்.

ஐசியூவில் அ.தி.மு.க இருக்கும் என்று தான் பேசினேன்; இபிஎஸ் ஐசியூவில் இருப்பார் என பேசவில்லை இ.பி.எஸ் 100 ஆண்டுகள் மன நலத்தோடு வாழ வேண்டும். அதிமுகவை வழிநடத்த இபிஎஸ்-க்கு மட்டும் தான் தகுதி உள்ளது. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இபிஎஸ்தான் தொடர வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே நல்ல காரியம். அப்போதுதான் எங்கள் வேலையும் சுலபமாக இருக்கும். அதிமுகவினர் இதை ஒத்துக் கொள்வார்களா என தெரியாது, ஆனால் நான் முன்மொழிகிறேன், நீங்கள்தான் நிரந்தர பொதுச்செயலாளர். அதிமுகவை பாஜகவிடம் இருந்து மீட்க வேண்டும், அதிமுகவை பாஜக கூறுபோட்டு வருகிறது.

பழனிசாமியின் முதல் சுற்றுப்பயணத்தில் அதிமுகவினர் பாதிபேரை காணவில்லை. 2வது சுற்றுப்பயணத்தில் பேருந்தில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வருவார். செங்கோட்டையன் கோயிலுக்கு செல்வதாக அமித் ஷாவை சந்தித்து வந்துள்ளார். பாஜகவின் அறுவை சிகிச்சையால் அதிமுக ஐ.சி.யூ.வில் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.