Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக, பாஜவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது தமிழகத்தில் 39 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: ‘வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். அதிமுக, பாஜ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது’ என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் மக்களின் மனநிலையை அறியும் வகையில் இந்தியா டுடே மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நாடு முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தின. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது. இம்முறை ஒரு இடத்தையும் விடாமல் மொத்தமாக ஸ்வீப் செய்யும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என கூறப்பட்டுள்ளது. மேலும் , திமுக கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 15 சதவீத வாக்குகள் பெறும் என்றும், மற்ற கட்சிகள் 38 சதவீத வாக்குகள் பெறும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜ கூட்டணி 2019ல் 27 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் இம்முறை 24 தொகுதிகளாக குறையும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 2019ல் 1 இடத்தில் வென்ற நிலையில் இம்முறை 4 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. 17 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் பாஜ 3, காங்கிரஸ் 10, பிஆர்எஸ் 3, ஏஐஎம்ஐஎம் 1 தொகுதிகளில் ஜெயிக்கும் என கூறப்பட்டுள்ளது. 22 தொகுதிகளை கொண்ட ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் 17 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2019ல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 இடங்களை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

20 தொகுதிகளைக் கொண்ட கேரளாவில், கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் இந்தியா கூட்டணி மொத்தமாக 20 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. நாட்டில் அதிக தொகுதிகளை கொண்ட உபியில் 80 தொகுதிகளில் பாஜ கூட்டணி 72 இடங்களையும், இந்தியா கூட்டணி 8 இடங்களையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. 48 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜ கூட்டணி 22 தொகுதியிலும் இந்தியா கூட்டணி 26 தொகுதிகளிலும் ஜெயிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.பீகாரில் கடந்த 2019ல் 39 தொகுதியில் வென்ற நிலையில் இம்முறை 32ல் பாஜ அணி வெல்லும் என்றும் இந்தியா கூட்டணி 2019ல் 1 இடத்தில் வென்ற நிலையில் இம்முறை 8 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் 7 தொகுதிகளையும் பாஜ கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

* வடக்கில் பாஜ தெற்கில் இந்தியா

இந்த கருத்துக்கணிப்பில், 132 தொகுதிகளைக் கொண்ட தென் இந்தியாவில் இந்தியா கூட்டணி 76 இடங்களையும், பாஜ 27 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுவே 180 தொகுதிகளைக் கொண்ட வட இந்தியாவில் பாஜ கூட்டணி ஆதிக்கம் செலுத்தும் என கூறப்பட்டுள்ளது. வட இந்தியாவில் பாஜ கூட்டணி 154 இடங்களிலும், இந்தியா கூட்டணி 25 இடங்களிலும் வெல்லும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

2024 மக்களவை தேர்தல்

கருத்துக்கணிப்பு முடிவு

தமிழ்நாடு - 39 தொகுதி

கட்சிகள் 2019 முடிவு 2024 கணிப்பு

திமுக+ 38 39

பாஜ+ 0 0

மற்றவை 1